×

வெள்ளியணை பகுதியில் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு

கரூர், பிப். 5: வெள்ளியணை பகுதியில் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வெள்ளியணை அடுத்துள்ள ஒந்தாம்பட்டி நால்ரோடு, திருமலைநாதன்பட்டி, கிருஷ்ணரெட்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்,
இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் பதித்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுநாள் வரை காவிரி கூட்டு குடிநீர் கிடைக்கவில்லை.இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பட்டா வழங்க கோரிக்கை:  குளித்தலை தாலுகாவுக்குட்பட்ட கிருஷ்ணம்பட்டி மேற்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், இந்த பகுதியில் 20 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த பல மாதங்களாக இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருந்தோம். இந்நிலையில் கடந்த 1ம் தேதி அன்று, எங்கள் பகுதிக்கு, தாசில்தார், விஏஒ உட்பட அனைத்து அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு 8 பேருக்கு மட்டுமே இலவச வீட்டு மனை வழங்கப்படும். 12 பேருக்கு அடுத்த முறை பார்க்கலாம் என தெரிவிக்கின்றனர். இதனால் நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம். எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சாமானிய மக்கள் கட்சியினர் மனு:  கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சாமானிய மக்கள் கட்சியினர் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டம் சணப்பிரட்டி, சுக்காலியூர், செல்லாண்டிபாளையம், செட்டிபாளையம், பெரியாண்டாங்கோயில் போன்ற அமராவதி ஆற்றுப்பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் 10 மணி முதல் காலை 5 மணி வரை மணல் திருட்டு நடைபெறுகிறது. பகல் நேரங்களில், ஆற்றுப்பகுதியில் மணல் சலித்து வைக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் நடைபெறுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இரவு நேரத்தில் 20க்கும் மேற்பட்ட வண்டிகளில் மணல் எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஆற்றில் மணல் எடுக்க தடையுள்ள நிலையில் திருட்டுத்தனமாக நடந்து வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : office ,Karur Collector ,area ,Velliyanai ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...