×

திருப்பூர் மாணவர் குற்றாலம் லாட்ஜில் மர்மச்சாவு

திருப்பூர், பிப்.5: திருப்பூர் மாவட்டம், குட்டகம் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் கார்த்திக் ராஜா (18), அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் படித்த பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ள சாலையில் இயங்கிவரும் கலைக்கல்லூரியில் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராதா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் படித்து வந்தார். கார்த்திக்ராஜாவுக்கும், ராதாவுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இந்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.  இந்நிலையில், கடந்த வாரம் கார்த்திக் ராஜாவும், ராதாவும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 1ம் தேதி நெல்லை வந்தனர். பின்னர், அங்கிருந்து குற்றாலம் சென்று அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். கடந்த 2ம் தேதி மாலை கார்த்திக் ராஜா தங்கியிருந்த அறையில் தூக்கிடப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ராதா, லாட்ஜ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கார்த்திக்ராஜாவின் கழுத்தில் ரத்த காயம் இருந்தது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தாரா அல்லது கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அவரது பெரியப்பா கருணாநிதி கொடுத்த புகாரின்பேரில் ராதா மற்றும் விடுதி மேலாளர், ஊழியர்கள், காவலாளி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தென்காசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கார்த்திக்ராஜாவின் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் நேற்று மறுத்து விட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சாவிற்கான உண்மையான காரணம் தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். தென்காசி அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர் சாதன வசதி இல்லாததால் கார்த்திக்ராஜாவின் உடல் நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.இதுகுறித்து கார்த்திக் ராஜாவின் தந்தை ராஜ்குமார் மற்றும் உறவினர்கள் நேற்று நெல்லை கலெக்டர், எஸ்.பி.,யிடம் அளித்த மனு விபரம்: நான் தனியார் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறேன். எனக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். எனது 2வது மகன் கார்த்திக் ராஜா கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மாணவியும் எனது மகனும் காதலித்து வந்தனர்.ஜனவரி மாதம் இருவரும் தலைமறைவாகி விட்டனர். மாணவியின் அப்பா கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் பேரில் ஜனவரி 20ம் தேதி இருவரும் ஆஜராகி மனப்பூர்வமாக பிரிகிறோம் என எழுதிக்கொடுத்தனர். அதன்பின் எனது மகன் என்னுடன் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 31ம் தேதி எனது மகனை காணவில்லை. கடந்த 2ம் தேதி மாலை 5.30 மணியளவில் மாணவியின் தந்தை எனது செல்போனில் தொடர்பு கொண்டு குற்றாலம் லாட்ஜில் எனது மகன் போதையில் இருப்பதாகவும், நீங்கள் அங்கே வாருங்கள் என்றும் தெரிவித்தார். நான் எனது  அண்ணன் கருணாநிதியை அனுப்பி பார்த்தபோது, அங்கு எனது மகன் பிணமாக இருப்பதாக தெரிவித்தார். எனது அண்ணன் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். எனது மகன் சாவில் மர்மம் உள்ளது. லாட்ஜில் உள்ளவர்கள் திட்டமிட்டு எனது மகன் சாவை மறைக்கின்றனர். கொலையை மறைக்க பல பொய்கள் கூறப்படுகின்றன. அந்த லாட்ஜில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். எனது மகன் சாவில் உள்ள மர்மங்களை அதிகாரிகள் வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupur Student Courtallam Lodge ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி வழங்கல்