×

கோவை-ராமேஸ்வரம் ரயில் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

கோவை, பிப். 5: கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மீண்டும் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆறு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம்,  தினமும் பொள்ளாச்சி சென்று வரும் பொதுமக்களும், தென்மாவட்டங்களுக்கு இயந்திர உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்யும் கோவை மாவட்ட வியாபாரிகளும் பயனடைந்து வந்தனர். கோவை-பொள்ளாச்சி வரையிலான சுமார் 39 கி.மீ. ரயில் பாதையானது மீட்டர் கேஜ் என கூறப்படும் சிறிய பாதையாக இருந்தது. இதனை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணிகள் நடைபெற்று வந்ததால், இவ்வழியாக இயக்கப்பட்டு வந்த ஆறு ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அகல ரயில்பாதை பணி நிறைவடைந்தது. ஆனாலும், தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவதில் ரயில்வே நிர்வாகம் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறுஅமைப்பினர் நடத்திய போராட்டங்களுக்கு பிறகு, மூன்று ரயில்கள் மட்டும் மீண்டும் இயக்கப்படுகின்றன.

மீதமுள்ள 3 ரயில்களையும் இவ்வழித்தடத்தில் இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் அமைப்பின் தலைவர் ஜெயராமன் கூறியதாவது: தற்போது, மூன்று ரயில்கள் இவ்வழித்தடத்தில் இயங்கி வருகின்றன. காலை 5.45 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் ரயில், பொள்ளாச்சி சென்றடைந்து அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு போத்தனூர் வருகிறது. இதேபோல், மாலை 5.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். தினமும் 700 முதல் 800 பேர் இந்த ரயில்களை பயன்படுத்துகின்றனர். மற்றொரு ரயில் மதுரை-கோவைக்கு இயக்கப்படுகிறது. காலை 7.45க்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் மதியம் 1.30க்கு போத்தனூர் வந்தடைகிறது. மீண்டும் இந்த ரயில் 1.45க்கு மதுரை செல்கிறது. இதுபோல், மூன்று ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஆனால், ராமேஸ்வரத்திற்கு செல்லும் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இந்த ரயிலை மீண்டும் இயக்கினால் கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தின் பெரிய காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரம். தென்மாவட்டங்களில் இருந்து மீன்கள் கோவைக்கு விரைவில் வரும். தென்மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு மக்கள் எளிதில் சென்றடைய முடியும். எனவே, விடுபட்ட மீதமுள்ள ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : run ,Coimbatore-Rameshwaram ,
× RELATED 1 ரன் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ்...