×

கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் குழுவினர் ஆய்வு

கோவை, பிப். 5:  கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நிதியுதவியுடன் ரூ.286 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணி துவங்கவுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் குழுவினர் நேற்று மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர்.
தமிழக அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜய்கா) நிதி வழங்க முடிவு செய்தது. கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு கட்டடம் கட்டவும், நவீன உபகரணங்கள் வாங்கவும் ரூ.286 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பிரமாண்ட 6 மாடி கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்கான, இடம் தேர்வு செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணி நடந்து முடிந்துள்ளது. மருத்துவமனையில் தற்போதுள்ள நர்சிங் விடுதி, ஆடிட்டோரியம், மகளிர் விடுதி, காசநோய் பிரிவு வரை இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக, நேற்று கோவை அரசு மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஆர்க்கிடெக் யுமாயோ யுஜி என்பவர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். புதிய கட்டடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம், இடிக்கப்படும் இடங்களுக்கு குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர், மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், “ஜப்பான் நாட்டின் ஆர்க்கிடெக் குழுவினர் ஆய்வு நடத்தினர். புதிய கட்டிடம் கட்டப்படும் இடங்கள் குறித்தும், நிதி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கார் பார்க்கிங்கிற்கு தனி இடம் வேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடம் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கும்” என்றார்.

Tags : team ,government ,Japanese ,Coimbatore Government Hospital ,
× RELATED பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை...