×

உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு போலீசை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம்,பிப்.5: ஒன்பதாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி  தொழிலாளர்கள், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து, நேற்று பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த  விசைத்தறி தொழிலாளர்கள், கூலி உயர்வு ேகட்டு தொடர் வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத  போராட்டம் நடத்த காவல்துறையிடம், தொழிற்சங்கத்தினர் முறைப்படி அனுமதி  கேட்டிருந்தனர். மேலும், உண்ணாவிரதத்திற்கான ஏற்பாடுகளில் தொழிற்சங்கத்தினர்  ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உண்ணாவிரத போராட்டம்  நடத்த அனுமதி வழங்க முடியாதென, போலீசார் மறுப்பு தெரிவித்தனர். எட்டு  நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடந்த போதிலும், காவல்துறை மற்றும்  வருவாய்துறை அதிகாரிகள், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல்,  ஜனநாயக முறைப்படி உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் அனுமதி அளிக்காதது,  தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன்  அறிவிப்பில்லாமல் பள்ளிபாளையம் நான்கு சாலையில் திரண்ட விசைத்தறி தொழிலாளர்கள், உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க மறுத்த  காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

இதையடுத்து போலீசார் தொழிற்சங்கத்தினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.  அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தொழிலாளர்கள் ஆவாரங்காட்டில் போராட்ட  விளக்க கூட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல், விசைத்தறி  சங்க மாவட்ட நிர்வாகிகள் அசோகன், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நாளை (6ம்தேதி) பள்ளிபாளையத்தில் கூலி உயர்வு குறித்த இரண்டாம் கட்ட  பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் உடன்பாடு எட்டாவிட்டால் தொழிலாளர்களை  திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக என அறிவித்துள்ளனர்.

Tags : Lecturers ,
× RELATED அதிமுக ஆட்சி காலத்தில் அதிகார...