×

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்

கிருஷ்ணகிரி, பிப்.5: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், போக்குவரத்து துறை, காவல் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போக்குவரத்து துறை சார்பில், வரும் 10ம் தேதி வரை 7 நாட்கள் மருத்துவ முகாம், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு ஊர்வலங்கள், இருசக்கர வாகன ஒட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், ஓட்டுனர் உரிமம் பெற்றும், மது அருந்தாமலும், செல்போன் பேசாமலும் வாகனத்தை இயக்க வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும், மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும்  தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டு சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

 இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை வழியாக கிருஷ்ணகிரி 5 ரோட்டை சென்றடைந்தது. இதில் மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், ஆட்டோ டிரைவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, டிஎஸ்பி கண்ணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், போக்குவரத்து கழக துணை மேலாளர் அரவிந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில், போக்குவரத்து கழக கிளை மேலாளர் இளங்கோவன், பொறியாளர் சேகர், போக்குவரத்து அலுவலர் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு