×

புதுவை, காரைக்காலில் இயங்கி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் சிஎஸ்ஆர் நிதி ஒரு ரூபாய் கூட வசூலிக்கவில்லை

புதுச்சேரி, பிப். 5:  புதுச்சேரி, காரைக்காலில் இயங்கி வரும் பல கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக  ஒரு ரூபாய் கூட நிதி வசூலிக்கப்படாதது தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்ததுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் எந்தவொரு பிராந்தியத்திலும், அந்த பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் தொழிற்பேட்டைக்கு அப்பாற்பட்டு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அமையும்போது, அந்த நிறுவனத்தின் மூலம் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தின் (சிஎஸ்ஆர்) கீழ் நிதி பெற்று அப்பகுதியின் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவர். கடந்த 10 ஆண்டுகளாக எந்தெந்த நிறுவனங்களிடம் சிஎஸ்ஆர் நிதி பெறப்பட்டது என இந்திய தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்டதற்கு, அவர்கள் முதல்வரை தலைவராக கொண்டு 7 உறுப்பினர்கள் செயல்படும் இந்த கமிட்டி மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு தொகுதியை கொண்ட ஏனாம் பிராந்தியத்தில் மட்டும் ஜிஎஸ்பிசி, ஓஎன்ஜிசி, இஐஎல், ரில் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.12 கோடி நிதி பெற்று, அந்த பகுதி மேம்பாட்டிற்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளனர்.
 இதிலிருந்து 23 தொகுதியை கொண்ட புதுச்சேரி பிராந்தியத்திலும், 5 தொகுதிகளை கொண்ட காரைக்கால் பிராந்தியத்திலும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்தும், எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து சிஎஸ்ஆர் நிதி பெறவில்லை என தெரிய வருகிறது.

குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் தொழிற்பேட்டைக்கு அப்பாற்பட்டு விளைநிலங்கள் பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறிவிட்ட நிலையில், இந்த நிறுவனங்களில் இருந்து சிஎஸ்ஆர் நிதி பெற்று இந்த பிராந்தியங்களின் சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தாதது வருத்தத்திற்குரிய செயலாகும். ஒரு தொகுதியை கொண்ட ஏனாம் பகுதியில் மட்டும் ரூ.12 கோடி வசூலித்துள்ள நிலையில், புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்திலும் இந்த நிதியை வசூலிக்காதது ஏன்? எனவே, தற்பொழுது புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடி காரணமாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, இந்த இரு பிராந்தியங்களில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து முறையே சிஎஸ்ஆர் நிதி பெற்று இந்த பகுதியின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். மேலும், இந்த மனுவில் நகலை கவர்னர் கிரண்பேடிக்கும் அனுப்பியுள்ளார்.

Tags : companies ,New Delhi ,Karaikal ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...