×

திருக்குறுங்குடி, அம்பை கோயில்களில் பத்ரதீப விழா

களக்காடு,பிப்.5: திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பத்ரதீப விழா நடந்தது.
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியிருப்பது சிறப்புமிக்கதாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று பத்ர தீப வழிபாடு நடப்பது வழக்கமாகும்.  அதன்படி நடப்பாண்டு பத்ரதீப வழிபாடு நேற்று நடந்தது.     இதையொட்டி மாலை 6.40 மணிக்கு பெருமாள் சன்னதியில் உள்ள நந்தா விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின் கொடிமர மண்டபத்தில் லட்சுமி விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் வெளி மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த  பத்தாயிரம் விளக்குகளில் பெண்கள் தீபம் ஏற்றினர். தீப ஒளியில் மண்டபங்கள் ஜொலித்தது. அதனைதொடர்ந்து பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.  பெருமாள் தாயாருடன் வாகனத்தில்எழுந்தருளி பிரகாரங்களில் உலா வந்த்கார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.     அம்பை: அம்பை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மரகதாம்பிகை சமேத காசி நாத சுவாமி கோயிலில் 102வது ஆண்டு தை அமாவாசை பத்ர தீப விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கும்ப பூஜை, ஹோமம், நவஆவர்ண பூஜை, யாகசாலை பூஜை நடந்தது. 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு தாமிரபரணி நதிக்கரை படித்துறையில் தீர்த்த வாரி நடந்தது. மாலை 6 மணிக்கு அம்பை சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்று கோயில் உள் பிரகாரம் வெளி பிரகாரம் மற்றும் கோயிலை சுற்றி 10008 தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். இதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு விஷேச அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.  நிகழ்ச்சியில் தக்கார் வெங்கடேஸ்வரன், செயல் அலுவலர் சத்யசீலன், ராஜகோபுர குழு தலைவர் வாசுதேவராஜா, ஐயப்பா சேவா சங்கம் சண்முகம், கணக்கர் கந்தசாமி, பக்த பேரவை சேது, ஆறுமுக நயினார், சுடலையாண்டி,சங்கரநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள், கோயில் ஊழியர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags : Badrathbeepa Festival ,temples ,Thirukurungudi ,
× RELATED கோயில் அறங்காவலர்கள் நியமனங்களை...