×

6500 ஹெக்ேடரில் அறுவடைக்கு தயாராகும் கும்பப்பூ குமரியில் அரசு கண்காணிப்பில் நெல் கொள்முதல்

நாகர்கோவில், பிப். 5:  குமரி மாவட்டத்தில் நேஷனல் கன்ஸ்யூமர் கோ ஆப்பரேட்டிவ் பெடரேசன் (என்சிசிஎப்) மூலம் நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. நெல் விவசாயம் அணையின் நீர் மற்றும் மழையை நம்பியே நடந்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்து 500 ஹெக்ேடர் பரப்பளவில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்துள்ளனர். நெல் அறுவடை தொடங்கும்போது விவசாயிகள் நெல்லிற்கு போதிய விலை கிடைக்க நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.   ஆனால் மாவட்ட நிர்வாகம் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுத்தாலும், கொள்முதல் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் நெல்லில் அதிக ஈரத்தன்மை, கறுப்பு நெல் என காரணம் காட்டி கொள்முதல் செய்வது இல்லை. கடந்த 10 வருடமாக இந்த நிலைதான் நீடித்து வருகிறது. இதனால் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை வாகனத்தில் எடுத்துச் சென்று திரும்ப கொண்டு வரும் விவசாயிகள் மேலும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை இருந்து வருகிறது.
  இதனை கருத்தில் கொண்டு தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து விடுகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்தியது. இதன் காரணமாக ஒரு கிலோ நெல் ₹18க்கு விவசாயிகளிடம் இருந்து குமரி மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

 குமரி மாவட்டத்தில் குறிப்பாக தெரிசனங்கோப்பு, தாழக்குடி, அனந்தனார் சானல் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள், இறச்சகுளம், பறக்கை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த கும்பப்பூ நெல்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் அறுவடை தொடங்கிவிடும். இதனால் மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களை தொடங்க வேண்டும். விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோட்டைக்கு ₹800 இழப்பு:  இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவில் நெல்சாகுபடி நடந்து வருகிறது. கும்பப்பூ சாகுபடி செய்தபோது மழை அதிக அளவு பெய்தது. இதனால் நெல்பயிர்கள் செழித்து வளர்ந்தது. நெல் மணியில் பால்கட்டும்போது மழை பெய்தால், மகசூல் அதிகமாக இருக்கும். ஆனால் கும்பப்பூ நெல்மணியில் பால் கட்டும்போது, மழை பெய்யவில்லை. இதனால் நெல்மணிகள் செழிப்பு இல்லாமல் உள்ளது.   குமரி மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும்போது நெல்லிற்கு உரிய பணம் கிடைக்கும். ஒரு கிலோ ₹18க்கு கொள்முதல் செய்யும் போது 100 கிலோவிற்கு ₹1800 கிடைக்கும். ஒரு கோட்டை (87 கிலோ) நெல் ₹1566 கிடைக்கும். நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாத போது தனியாரிடம் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்கின்றனர். அறுவடை தொடங்கும்போது நல்ல தரத்துடன் இருக்கும் ஒரு கோட்டை நெல்லை ₹1200 வரை கொள்முதல் செய்வார்கள்.

  அனைத்து பகுதியிலும் அறுவடை நடக்கும்போது கொள்முதல் விலை ₹800 வரை குறைந்துவிடும். இதனால் ஒரு கோட்டைக்கு ₹800 வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். இப்படி தொடர்ந்து நஷ்டத்தை குமரி விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.வங்கி கணக்கில் பணம்:  இது குறித்து வேளாண்மை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் நெல்கொள்முதல் ஆதார விலையை உயர்த்தியுள்ளது. இதன்மூலம் சாதாரண ரகத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு ₹1800ம், சன்னரகத்திற்கு ₹1840ம் கிடைக்கும். விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் குமரி மாவட்டத்தில் கிடைக்கும் நெல்லில் ஈரப்பதம் 20 சதவீதம் இருக்கும். இதனால் விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்ட கலெக்டரின் நடவடிக்கையால் கடந்த கன்னிப்பூ அறுவடையின்போது 5 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் கலெக்டரின் நடவடிக்கையால் 2 நெல் உலர்ப்பான் இயந்திரம் குமரி மாவட்டத்திற்கு வாங்கப்பட உள்ளது. இந்த உலர்ப்பான் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் டெல்லா மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நேஷனல் கன்ஸ்யூமர் கோ ஆப்பரேட்டிவ் பெடரேசன் (என்சிசிஎப்) மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

  இதற்கு குமரி மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் 1.10.2018 முதல் 30.9.2019 வரை நெல் கொள்முதல் செய்யும். அரசு நிர்ணயித்துள்ள ஆதாரவிலையை கொடுத்து இந்த நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யவுள்ளது. விவசாயிகள் நெல் கொடுக்கும்போது, ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், அடங்கல் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும். கொடுக்கப்பட்ட நெல்லிற்கு உண்டான பணம் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைத்த பிறகுதான் விவசாயிகளின் நெல்லை அந்த நிறுவனம் எடுத்துசெல்லும். இதனை மாவட்ட நிர்வாகம், வேளாண்மை துறை அதிகாரிகள், நுகர்பொருள் வாணிபகழகம் கண்காணிக்கும்.தனியாரிடம் நெல்லை கொடுக்காமல் ஒருநாள், அல்லது இரண்டு நாட்கள் காத்திருந்து இந்த நிறுவனத்திற்கு கொடுக்கும்போது ஒரு டன்னிற்கு தனியார் கொடுக்கும் பணத்தில் இருந்து ₹4 ஆயிரம் வரை அதிகமாக கிடைக்கும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புரிதல் ஏற்படுத்த வேண்டும்
குமரி கலெக்டரிடம் விவசாயிகள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நெல் கொள்முதல் திட்டம் குறித்து கிராமங்கள் தோறும் விவசாயிகளை கூட்டி வேளாண்துறை அலுவலர்கள் கலந்துரையாடல் நடத்தி விளக்க வேண்டும். அரசு கொள்முதல் நடைமுறைகள், பயன்கள், கிடைக்க கூடிய லாபம், அணுக வேண்டிய அலுவலர்கள், கைபேசி எண் குறித்து துண்டுபிரசுரம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் குறித்து புரிதலை ஏற்படுத்த வேண்டும்.அறுவடைக் காலம், அறுவடையாகும் பகுதி மற்றும் கொள்முதல் செய்ய வசதியான இடங்களை கண்டறிந்து கொள்முதலை செயல்படுத்த அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை உரிய தகவல்கள் திரட்ட அறிவுறுத்த வேண்டும். இவ்விதம் செயல்படுவதன் மூலம் அதிகபட்ச கொள்முதல் நடைபெறுவதோடு, விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Paddy ,Kumboo Kumari ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...