×

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை போல் உள்ளது ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில், பிப். 5:  நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை போல் உள்ளது.  அதில் பல தவறான விசயங்களை கூறியுள்ளனர். தேசிய புள்ளியியல் ஆணையம் ஒவ்வொரு  ஆண்டும் வேலை இல்லாதவர்கள் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யும். 2018ம்  ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  இந்த  அறிக்கை தயார் செய்த பின்னரும் அதை தாக்கல் செய்ய மத்திய அரசு  அனுமதிக்கவில்லை. இதனால் அந்த ஆணையத்தின் தலைவர் மோகனன், குழு உறுப்பினர்  மீனாட்சி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பாஜ ஆட்சிக்கு  வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில்  கூறினர். தற்போது முன்பைவிட வேலையிழப்பு அதிகரித்துள்ளது. இதற்கு  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவையே காரணம். விவசாயிகளின்  உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையில்லை. விவசாயிகளுக்கு தேவையான  சலுகைகள் வழங்கப்பட வில்லை. கல்வி துறையில் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை.  கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை ரப்பர் விலை வீழ்ச்சியை தடுக்க  இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும். அதேநேரத்தில் கச்சா முந்திரிக்கு  இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  தனியார் காப்புக்காடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என  கூறியிருந்தார். ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

மத்திய  பட்ஜெட்டில் கடந்த 5 ஆண்டாக குமரி மாவட்டத்துக்கு எந்த ரயில் திட்டமும்  அறிவிக்கப்படவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் புதிய  கோரிக்கை எதுவும் இல்லை. அவர்களின் நிலுவை ஊதியம் மற்றும் புதிய வேலை  வாய்ப்புக்கு எதிரான அரசாணையை எதிர்த்தே போராட்டம் நடத்தினர். ஆனால் அரசு  நீதிமன்ற ஆணைக்கு எதிராக வேலை நிறுத்த ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்களை  பழிவாங்கி வருகிறது.
குமரி  மாவட்டத்தில் பிரதமரை கண்டித்து ேபசியதற்காக மார்க்சிஸ்ட் கட்சியை  சேர்ந்தவர்களை காவல்துறை கைது செய்தது. ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன்  கொடும்பாவி எரித்தவர்களை காவல்துறை கண்டு கொள்ளவில்லை. மாநில அரசு மத்திய  அரசின் எடுபிடியாக செயல்படுகிறது.மேற்கு வங்கத்தில் சட்டமன்ற  மற்றும் நாடளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் மீது  அளவுகடந்த வன்முறை அவிழ்த்து விடப்பட்டது. ஜனநாயகம் குறித்து பேச  மம்தாவிற்கு தகுதி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது,  மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் எம்பி பெல்லார்மின், முன்னாள்  எம்எல்ஏக்கள் நூர்முகம்மது, லீமாறோஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : government ,BJP ,Ramakrishnan ,
× RELATED ஹரியானா பாஜக முதல்வர் விலக துஷ்யந்த் வலியுறுத்தல்