×

மஹோதய புண்ணிய கால தீர்த்தவாரி அண்ணாமலையார் அருள்பாலித்தார் திருவண்ணாமலை ஐயங்குளத்தில்

திருவண்ணாமலை, பிப்.5: திருவண்ணாமலையில் இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில் மஹோதய புண்ணிய காலத்தையொட்டி, நேற்று சுவாமி தீர்த்தவாரி நடந்தது.தை அமாவாசையன்று, திருவோண நட்சத்திரம், திங்கட்கிழமை (சோமவாரம்) ஆகியவை ஒருசேர அமையும் தினம் மஹோதய புண்ணியகாலம் என அழைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு மஹோதய புண்ணியகாலம் நேற்று அமைந்தது. மீண்டும், வரும் 2043ம் ஆண்டுதான் இதுபோன்ற நிகழ்வு அமைவதாக கூறப்படுகிறது.இந்த நாளில் திருக்குளங்களில் புனித நீராடுவதும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதும் மிகவும் புண்ணியம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ஆன்மிக குளங்களில், ஆறுகளில் மஹோதய அமாவாசை நிகழ்வு நடந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 1.45 மணி அளவில், சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சுவாமி புறப்பாடும், காலை 6.30 மணி அளவில் இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது.அப்போது, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், அங்காள பரமேஸ்வரி, பச்சையம்மன், ரேணுகாம்பாள், சுப்பிரமணியர், வடவீதி காமாட்சியம்மன், இரட்ைட காளியம்மன் ஆகியோர் அலங்கார ரூபத்தில் இந்திர தீர்த்தத்தின் கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அதையொட்டி, ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்திர தீர்த்தத்தில் சூலவடிவான சந்திரசேகரருக்கு நடந்த சுவாமி தீர்த்தவாரியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தினர்.27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ம் ஆண்டு நடந்த மஹோதய புண்ணியகால அமாவாசையன்று, இந்திர தீர்த்தத்தில் இதேபோல் தீர்த்தவாரி நடந்தது. அப்போது, முறையான ஏற்பாடுகள் செய்யாததால், 4 பக்தர்கள் குளத்தில் மூழ்கி இறந்தனர் எனவே, இந்த ஆண்டு இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்திர தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட அனுமதிக்கவில்லை. படிகளில் இறங்கி குளத்துக்குள் செல்லாமல் தடுக்க சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்திருந்தனர். முன்னெச்சரிக்கையாக, தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தியிருந்தனர்.

Tags : shrine devotees ,Annamalaiyar ,Thiruvannamalai Ayyankulam ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான...