×

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு: விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, பிப். 5: நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைத்து விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் நேற்று நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.   விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 23ம் தேதி திருச்சியில் நடைபெற்ற ‘தேசம் காப்போம்’ மாநாட்டில்  அழைப்பை ஏற்று பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் தலைவருக்கு இந்த உயர்நிலைக்குழு முழு அதிகாரத்தை வழங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பணிக்குழுக்களை உடனடியாக அமைத்திட வேண்டும். தொடர்புடைய மாவட்டச்  செயலாளர்கள் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மற்றும் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் இதற்கான கலந்தாய்வுக் கூட்டங்களை  நடத்திடவேண்டும்.  நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கு துரை.ரவிக்குமார், சிந்தனைசெல்வன், வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகிய 10 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையரை சட்டவிரோதமாகக் கைது செய்வதற்கு சிபிஐ முயற்சிப்பது  கண்டனத்துக்குரியது. அந்த  வழக்குத் தொடர்பான ஆதாரங்களை அவர் அழித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதுவே மோடி அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு  சான்றாக இருக்கிறது. மோடி அரசின் பாசிசத் தாக்குதலை எதிர்த்துப் போராடி வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முழுமையான  ஆதரவை இந்த உயர்நிலைக்குழு தெரிவித்துக்கொள்கிறதுநமது நாட்டின் ஜனநாயகம் தேர்தல் முறையை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற ஜனநாயகம் ஆகும். தேர்தலானது, நம்பகத்தன்மையோடு நடத்தப்படாவிட்டால் ஒட்டுமொத்த  ஜனநாயகமும் கேள்விக்குறியாகி விடும். எனவே, அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனந்த் டெல்டும்டேவைக் கைது செய்வதற்கு மராட்டிய மாநில பாஜ அரசு  முயற்சித்து வருகிறது. அதை இந்த உயர்நிலைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்மீதான பொய்வழக்கைத் திரும்பப் பெறுமாறு மகாராஷ்டிர மாநில அரசை இந்தக் குழு  வலியுறுத்துகிறது.பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி பல மாதங்கள் கடந்த பின்னரும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு  வைத்திருப்பது வேதனை அளிக்கிறது. எழுவர் விடுதலை தொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : group ,election ,meeting ,Visiga High Commission ,
× RELATED 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான...