×

திருவாரூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 5, 6ம் தேதிகளில் நடக்கிறது

திருவாரூர், பிப்.2: திருவாரூர் மாவட்ட  அளவிலான விளையாட்டு போட்டிகள் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறுகிறது.    இதுகுறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்ட அளவில்  முதல்வர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டிகள் மாவட்ட  விளையாட்டு பிரிவின் சார்பில் வரும் 5  மற்றும் 6 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 21 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே  கலந்து கொள்ளலாம். மேலும் மாவட்டத்தில் வசிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய  அடையாள அட்டையின் நகல் அல்லது கல்வி நிறுவனங்களின் அடையாள அட்டை நகல்,  பிறந்த தேதிக்கான சான்று நகல் ஆகியவற்றினை போட்டி நடைபெறுவதற்கு முன்  அலுவலர்களிடம் வழங்க வேண்டும். 5ம் தேதி  மாவட்ட விளையாட்டு அரங்கில்  ஆண்களுக்கான கபடி மற்றும் வாலிபால் போட்டிகளும், ஆண்கள் மற்றும்  மகளிருக்கான தடகளம், கூடைப்பந்து, மேசைப்பந்து மற்றும் கைப்பந்து  போட்டிகளும் நடைபெறும். மேலும் மன்னார்குடியில்  பளுதூக்கும் போட்டிகளும் அன்று நடைபெறும்.

 6ம் தேதி மாவட்ட  விளையாட்டரங்கில் மகளிருக்கான கபடி மற்றும் வாலிபால் போட்டிகளும், ஆண்கள்   மற்றும் மகளிருக்கான நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளும்,   திருவாரூர் தென்றல் நகர் பூப்பந்து மைதானத்தில் பூப்பந்து போட்டிகளும்  நடைபெறும்.  தடகள விளையாட்டுப்போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிருக்கு  100மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல்,  குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும்,  ஆண்களுக்கு 800 மீ  மற்றும் 5 ஆயிரம் மீ ஓட்டம், 110மீ தடை தாண்டும்  ஓட்டமும், மகளிருக்கு 400 மீ. மற்றும்  3 ஆயிரம் மீ. ஓட்டம், 100 மீ. தடை  தாண்டும் ஓட்டமும் நடைபெறும். போட்டிகள் அனைத்தும் சரியாக சாலை 9 மணியளவில்  துவங்கப்படும் என்பதால் தாமதமாக வரும் வீரர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள  அனுமதிக்கப்படமாடார்கள்.  மாவட்ட அளவிலான குழு மற்றும் தனித்திறன்  போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் முதல் பரிசாக  ரூ.ஆயிரம், 2ம் பரிசாக ரூ.750, 3ம் பரிசாக ரூ.500  வழங்கப்படும்.

மாவட்ட  அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில்  திருவாரூர் மாவட்ட அணியின் சார்பாக சீருடை வழங்கி அரசு செலவில் கலந்துகொள்ள  அனுமதிக்கப்படுவர். இதில் வெற்றி பெறும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும்  முதல் பரிசாக ரூ.ஒரு லட்சமும், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3ம் பரிசாக  ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : district level tournaments ,Tiruvarur ,
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது