×

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் நடுவில் விரிசல்

கொள்ளிடம், பிப்.2: கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் நடுவே ஏற்பட்டுள்ள விரிசலில் அவ்வழியாக டூவீலர்களில் வருபவர்கள் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கும் அவலநிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.நாகை  மாவட்டம், கொள்ளிடம் சோதனைச்சாவடியிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே  ஒரு கி.மீ. தூரத்திற்கு கடந்த 1950ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டு  திறக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்துதான் சென்னையிலிருந்து கன்னியாகுமரி  வரை சென்று வருகின்றனர். இந்தப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்து  கடலூர் மாவட்டத்தையும் நாகை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாகவும் இருந்து  வருகிறது.
இரவு மற்றும் பகல் ஆகிய 24 மணி நேரமும் இடைவிடாமல் அதிக  எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று  கொண்டேயிருக்கிறது. 1950லிருந்து இன்று வரை வலிமை குன்றாமல் அப்படியே  உள்ளது என்று சிறந்த பொறியாளர்களால் சான்று அளிக்கப்பட்டுள்ளது. இருந்தும்  இந்த பாலத்தை அதிகாரிகள் முறையாக பாரமரிக்கவில்லை என்று பொதுமக்கள்  சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மழை பெய்தால், தண்ணீர் உடனடியாக  வெளியேறும் அளவுக்கு, பாலத்தின் இரு புறங்களிலும் குழாய்கள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் செல்லும் குழாய்களை முறையாகப்  பராமரிக்கமல் விடப்பட்டுள்ளதால்  நீர் வெளியேறும் குழாய்களில் மண் மற்றும்  பிளாஸ்டிக் பொருட்கள்  மணலுடன் சேர்ந்து குழாய்களை அடைத்துக்கொண்டிருப்பதால், மழைநீர் உடனடியாக வெளியேற முடியாமல் பாலத்திலேயே தண்ணீர்  3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து தேங்கி விடுகிறது. இதனால் பாலத்தில்  விரிசல் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி, பாலத்தின் நடுவே  விரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பாலத்தின் நடுவே  ஏற்பட்டுள்ள விரிசலால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் அடிக்கடி தடுமாறி  கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே ஒரு கி.மீ. தூர  கொள்ளிடம் பாலத்தை முறையாக பராமரிக்கவும், பாலத்தின் நடுவே ஏற்பட்டுள்ள  விரிசலை சரி செய்யவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


-

Tags : riverbank ,
× RELATED கூவம் ஆற்றங்கரை வீடுகளை அகற்ற...