×

வீரகனூர் அருகே புளியங்குறிச்சியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

கெங்கவல்லி, பிப்.2: தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியங்குறிச்சி ஊராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் சீர்செய்யக்கோரி நேற்று காலை அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் பெண்கள் உள்பட 100க்கு மேற்பட்டோர் காலி குடங்களுடன் திரண்டனர். பின்னர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வீரகனூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வைரவன் குட்டை பகுதிகளில் ஆழ்கிணறு அமைக்கப்பட்டு மின் மேட்டார் மூலம் ஊராட்சி சார்பில் தண்ணீர் எடுத்து விடப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்த மின் மேட்டார் பழுதாகியுள்ள நிலையில், சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி செயலாளர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டத்தில் குதித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தலைவாசல் பிடிஓ வெங்கட்ராமனை போலீசார் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். அப்போது, உடனடியாக அப்பகுதியில் லாரி மூலம் குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், மின்மோட்டாரும் சரிசெய்யப்படும் என அவர் உறுதி கூறினார். இதன்பேரில், சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.

Tags : pedestrian crossings ,Veeraganur ,Puliyankurichi ,
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது