×

பொய் சாட்சியம் அளித்ததாக சிபிசிஐடி வழக்கு கோகுல்ராஜ் தோழிக்கு நாமக்கல் நீதிமன்றம் சம்மன்11ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

நாமக்கல், பிப்.2:சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ், கடந்த 2015 ஜூன் 24ம் தேதி, பள்ளிப்பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தோழி சுவாதி, கடந்த செப்டம்பர் 10ம் தேதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, அவர் கோகுல்ராஜ் யார் என்று தனக்கு தெரியாது எனவும், சிசிடிவியில் பதிவாகியுள்ள உருவம் தான் இல்லை எனவும் சாட்சியம் அளித்தார்.

அப்போது, அவரிடம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் நீதிமன்றத்தில் போட்டு காட்டப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் இருப்பது தான் அல்ல என என சுவாதி பலமுறை கூறினார். இதையடுத்து அரசு தரப்பில், முக்கிய சாட்சியான சுவாதி பொய் சாட்சியம் அளித்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் தனபால், சுவாதி வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து சுவாதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : CKCID ,court ,Gokulraj ,Namakkal ,
× RELATED கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்...