×

பெரும்பாறை பகுதியில் மலைவாழையை ருசிக்க மலையிறங்கும் யானைகள் லட்சக்கணக்கில் நஷ்டத்தால் விவசாயிகள் கவலை * வனத்திற்குள் நிரந்தரமாக விரட்ட கோரிக்கை

பட்டிவீரன்பட்டி, பிப். 2: பெரும்பாறை பகுதியில் மலைவாழைகளை குறிவைத்து காட்யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. யானைகளை வனத்திற்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரும்பாறை அருகே சேம்பிலியூத்து, மன்றவயல், கேசி பட்டி, பெரியூர், நடுப்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் காப்பி, மிளகு, மலைவாழை, சவ்சவ், ஆரஞ்ச், எலுமிச்சை விவசாயம் அதிகளவில் நடக்கிறது.குறிப்பாக மலைவாழை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.இங்கு அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வந்த காட்டுயானைகள் உணவு, குடிநீர் தேடி விவசாய பகுதிகளில் முகாமிட்டுள்ளன. பெரும்பாலும் இரவுநேரங்களில் வெளியே வரும் இந்த யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் சேம்பிலியூத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது தோட்டத்தில் யானைகள் புகுந்து மலைவாழைகளை நாசம் செய்து விட்டன.

தோட்டத்தை சுற்றிலும் வேலிகள் போட்டாலும் உடைத்து கொண்டு யானைகள் உள்ளே புகுந்து விடுகின்றன. கடந்தாண்டு மன்றவயலை சேர்ந்த தபால்ஊழியர் மாதி என்பவரை யானை மிதித்து கொன்றது. மேலும் மலைப்பகுதியில் இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களையும், தனியார் வாகனங்களையும் யானைகள் வழிமறிப்பது தொடர்கதையாக உள்ளது. ஆதிவாசி கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகளை யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இரவானால் தீ பந்தங்களை ஏற்றி வைக்கும் நிலை உள்ளது.எனவே உயிரிழப்பு, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகளை கும்கி போன்ற யானைகளின் துணை கொண்டு வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் பிடித்து வேறு வனப்பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என ஆதிவாசி மக்களும், மலைத்தோட்ட விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : peasants ,millions ,hills ,country ,Mandalay ,
× RELATED பல்லடம் அருகே முட்டை ஏற்றிச்சென்ற...