×

களக்காடு கோயிலில் பிப்.8ல் தெப்ப உற்சவம் தொடக்கம்

களக்காடு, பிப். 2: களக்காடு கோயிலில் வருகிற 8ம் தேதி தெப்ப உற்சவம் துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதற்கான கால்நாட்டு வைபவம் நடந்தது. களக்காடு  போலீஸ் நிலையம் அருகே சத்தியவாகீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான  தெப்பக்குளம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த  தெப்பக்குளம், நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரிய  தெப்பக்குளமாகும். இந்த தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 3 நாட்கள்  தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு தெப்ப    திருவிழா,  வருகிற 8ம் தேதி துவங்குகிறது. முதல் நாள் இரவு 8 மணிக்கு  சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் தெப்ப உற்சவமும், 2ம் நாளான 9ம்  தேதி இரவு 8 மணிக்கு வரதராஜபெருமாள் கோயில் தெப்ப உற்சவமும், 3ம் நாளான்று சந்தானகோபால கிருஷ்ணர் கோயில் தெப்ப  உற்சவமும் நடக்கிறது. இதையொட்டி தெப்ப திருக்கால் நாட்டும் வைபவம் நேற்று  நடந்தது. தெப்பக்குளத்தின் அருகில் வேதமந்திரங்கள் முழங்க  திருக்கால் நாட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளும்  நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை  முன்னிட்டு தெப்பக்குளம் நீர் நிரப்பப்பட்டு, நிரம்பி ததும்புகிறது. விழா  ஏற்பாடுகளை தெப்ப உற்சவ கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags : Kalakkadu temple ,
× RELATED களக்காடு கோயிலுக்கு புதிய யானை வாகனம்