×

32 படுக்கையுடன் கூடிய பழைய கட்டிடம் மூடல் அடிப்படை வசதியில்லாத சிவகிரி அரசு மருத்துவமனை நோய் தொற்றுபரவும் அவலநிலை மரண பயத்துடன் செல்லும் மக்கள்

சிவகிரி, பிப். 2:  சிவகிரி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுகாதாரமின்றி காட்சியளிப்பதால் நோய் தொற்றுபரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் மக்கள் மரண பயத்துடனே மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.1970ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவகிரியில் சுகாதாரத்துறையின் பொது மருத்துவமனையாக, பஞ்சாயத்து யூனியன் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையை அரசு மருத்துவமனையாக மாற்றக் கோரி 18.11.71ல் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான செல்லையா, 6 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதன் விளைவாக 1.11.72 முதல் சிவகிரி யூனியன் மருத்துவமனை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அங்குள்ள மலைக்கோவில் சாலையில் செயல்பட தொடங்கியது.  தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் புற நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இந்த மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 10.6.99ல் சிவகிரிக்கு வடக்கே திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகில் 32 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.பின்னர் படிப்படியாக தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 24 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சைப்பிரிவு, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவுக்கு என தனித்தனியாக கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கு குளியலறை, கழிப்பறை, சமையலறை போன்ற வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் சிவகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 50க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிவகிரி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள், கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 56 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனையில், 32 படுக்கை வசதி உள்ள பழைய கட்டிடம் நிரந்தரமாக மூடப்பட்டு தற்போது 24 படுக்கை வசதியுடன் மட்டுமே செயல்படுகிறது. மருத்துவமனையில் கழிப்பறை மற்றும் குளியலறைகளில் தண்ணீர் வசதி சரிவர இல்லாததால், அவைகள் நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. குடிநீர் வசதியும் இல்லை. உள் நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உணவு வழங்குவது நிறுத்தப்பட்டு சமையலறை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. மின் விசிறிகள், மின் விளக்குகள் சரிவர இயங்குவதில்லை. உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், போர்வைகள் சலவை செய்யப்படாமல் அழுக்கடைந்து துர்நாற்றம் வீசுகின்றன. மருத்துவமனையின் உள்ளேயும், வளாக சுற்றுப்புறத்திலும் ஆங்காங்கே மருத்துவக் கழிவுகளும் பிளாஸ்டிக் பொருட்களும் கொட்டப்பட்டு சுகாதார கேடான நிலையிலுள்ளது. இதனால், நோயை குணப்படுத்த வேண்டிய மருத்துவமனையே நோய்த்தொற்று வருவதற்கு காரணமாக இருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு மரண பயத்துடனே செல்ல வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தனர்.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் குருசாமி கூறியதாவது: சிவகிரி தாலுகா தலைமை மருத்துவமனையின் அவலப்போக்கைக் கண்டித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர், இணை இயக்குநர், மாவட்ட கலெக்டருக்கு மனுக்கள் அனுப்பி உள்ளோம். கடந்த டிச.2ம் தேதி பாம்பு கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அர்ச்சுணன் என்ற விவசாயி, மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் இறந்தார். இதனால் இந்த மருத்துவமனை மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர பராமரிப்பு நிதிகளை செலவு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளது. ஊழியரல்லாத வெளியாட்களை இங்கு மருத்துவப் பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாததால், மருத்துவமனையின் நிர்வாகம் மற்றும் கட்டமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சிவகிரி அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும், என்றார்.தனி அதிகாரியின்றி நிர்வாகம் சீர்குலைவு சிவகிரி அரசு மருத்துவமனையில் தற்போது 5 மருத்துவர்கள், 7 செவிலியர்கள், ஒரு செவிலியர் மேற்பார்வையாளர், மருந்தாளுநர், சுகாதாரப்பணியாளர் பணியாற்றி வரும் நிலையிலும், மகப்பேறு மருத்துவர், குழந்தை நல மருத்துவர், ஆண் மற்றும் பெண் நர்ஸ் உதவியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பல்நோக்குப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் போன்ற  பணியிடங்களில் ஆட்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. இதனால் மருத்துவச் சேவைப்பணிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனைக்கு என்று தனியாக மருத்துவ அதிகாரி நியமிக்கப்படாததால் மருத்துவமனையின் நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது.

Tags : bedroom ,Sivagiri ,disasters ,
× RELATED குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது