×

திட்டமிடல் இன்றி ஷட்டர் கட்டுமான பணி ஏரியை உடைத்து நீரை வெளியேற்றும் அதிகாரிகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

தாம்பரம்: செம்பாக்கம் ஏரியில் ஷட்டர் அமைக்கும் பணிக்காக, அதிகாரிகள் ஏரிக்கரையை உடைத்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல முக்கிய ஏரிகள் உள்ளன. இவை சுற்றுப் பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆனால், அதிகாரிகள் இவற்றை முறையாக பராமரிக்காததால் பல ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி குட்டை போல் குறுகி வருகிறது.  மேலும், ஏரியின் கரைப்பகுதி, வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை பலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளதால், மழைக்காலங்களில் ஏரிகளில் போதிய நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

அதுமட்டுமின்றி ஏரிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கழிவுநீரை வெளியேற்றி வருவதால், கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. இவற்றை தூர்வாரி, முறையாக பராமரிக்க வேண்டிய அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து ஆண்டுதோறும் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், தாம்பரம் அருகே ஏரியில் ஷட்டர் அமைக்கும் பணியை தொடங்கிய அதிகாரிகள், மணல் மூட்டைகளை வைத்து தண்ணீரை தடுத்துவிட்டு, பணிகளை தொடங்காமல், ஏரிக்கரையை உடைத்து, நீரை வெளியேற்றி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் அடுத்துள்ள செம்பாக்கம் பெரிய ஏரி முக்கிய நீர்நிலையாக திகழ்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் இந்த ஏரியில் நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ஏரியின் கலங்கல் அமைந்துள்ள பகுதிக்கு அருகில், பொதுப் பணித்துறையினர், ‘ரோலிங் ஷட்டர்’ அமைப்பதற்காக, 3 அடி அகலம், 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டினர். அதனால், ஏரியில் இருந்த பெருமளவு நீர், வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஏரியில் ‘ஷட்டர்’ அமைக்க வேண்டுமென்றால், மணல் மூட்டைகளை கொண்டு, நீர் வெளியேறாதபடி, தற்காலிக தடையை அமைத்து, அதன்பின் பணிகளை துவங்கி இருக்க வேண்டும்.

அதை தவிர்த்து, தேவையின்றி நீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு, ஷட்டர் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். முறையான திட்டமில் இன்றி பணியை தொடங்கியதே இதற்கு காரணம். நீர் முழுதுமாக வெளியேற்றப்பட்டால், ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் பாதிக்கப்படும். ஏரி நீரை வெளியேற்றாமல் ஷட்டர் அமைக்க வேண்டும்,’’ என்றனர்.

நிலத்தடி நீர் குறையும் அபாயம்
செம்பாக்கம் ஏரி மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், பல்லாவரம் நகராட்சியும், சிட்லபாக்கம்  பேரூராட்சியும் இணைந்து, கழிவுநீரை விடுவதால், நிலத்தடி நீர்  மாசடைந்து வருகிறது. செம்பாக்கம் நகராட்சி சார்பில், ஏரியின் நீர்பிடிப்பு  பகுதி, குப்பை கிடங்காக மாற்றப்பட்டது. பசுமை தீர்ப்பாயம் வரை பிரச்னை  சென்று, குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, கரைப்பகுதியை உடைத்து அதிகாரிகள் தண்ணீரை வீணாக வெளியேற்றுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனி வருவது கோடை காலம் என்பதால், இப்பகுதியில் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது.

Tags : lake ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...