×

கலெக்டரிடம் புகார் செய்தும் பலன் இல்லை வல்லம் ஏரி வரவு கால்வாயில் சாலை அமைத்த சிப்காட் நிர்வாகம்

பெரும்புதூர், பிப்.2: வல்லம் ஏரி வரவு கால்வாயை ஆக்கிரமித்து, சிப்காட் நிர்வாகம் சாலை அமைத்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டரிடம் புகார் செய்தும் பலன் இல்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பெரும்புதூர் ஒன்றியம் வல்லம் கிராமத்தில் சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப் பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரியில் இருந்து வல்லம், வடகால் பகுதியில் உள்ள 700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் செய்யபடுகிறது. வல்லம் ஏரி அருகில் சுமார் 245 ஏக்கரில் வானூர்தி உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக சாலை, கால்வாய் உள்ளிட்ட பணிகள் சிப்காட் நிர்வாகம் மூலம் நடந்து வருகிறது.
இதையொட்டி, வல்லம் ஏரிக்கு செல்லும் வரவுக் கால்வாய் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு மண் கொட்டி மூடபட்டது. மேலும், அதன் மேல் சாலை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து வல்லம் கிராம மக்கள், கடந்த 4 மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வல்லம் ஏரி நீரை நம்பி வல்லம், வடகால் பகுதியில் உள்ள சுமார் 750 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதை நம்பியே பல விவசாய குடும்பங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம், எச்சூர், பால்நல்லூர், வல்லம் கண்டிகை ஆகிய கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், கால்வாய் மூலம் வல்லம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது வல்லம் பகுதியில் வானூர்தி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான இடம் ஒதுக்கீடு செய்யபட்டு, தற்போது சாலை, கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக, வல்லம் ஏரிக்கு செல்லும் 60 அடி அகலம் மற்றும் 1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வரவுக் கால்வாயை, சிப்காட் நிர்வாகம் மண் கொட்டி அடைத்து, அதன் மீது சாலை அமைத்துள்ளது.

இதனால் வல்லம் ஏரிக்கு மழைநீர் செல்லாமல், ஏரியில் தண்ணீர் நிரம்புவது சாத்தியமில்லை. இந்த ஏரியை நம்பியுள்ள சுமார் 750 ஏக்கர் விவசாய நிலங்கள் கேள்விக் குறியாகிவிட்டது. எனவே, கால்வாயினை அகற்றிய சிப்காட் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பணிகள் தொடர்ந்து நடந்தால், பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Tags : collector ,administration ,Sipkad ,Vallam Lake Lane Canal Road ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...