×

வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கும் வண்டலூர் பெரிய ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்

கூடுவாஞ்சேரி, பிப் 2: வண்டலூர் பெரிய ஏரியை தூர் வாரி சீரமைக்க கோரி மாவட்ட கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையை ஒட்டியுள்ள வண்டலூர் ஊராட்சி, சிஎம்டிஏ கட்டுபாட்டில் உள்ளது. இதில் வண்டலூர், ஓட்டேரி, ஓட்டேரி விரிவு பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்டலூர் பெரிய ஏரி உள்ளது. இந்த பெரிய ஏரி, வண்டலூர் - வாலாஜாபாத் சாலையோரத்திலும், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மற்றும் மேம்பாலம் ஒட்டியபடியும் உள்ளது. எந்நேரமும் தண்ணீர் தேங்கியபடி உள்ள ஏரியில் தற்போது வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், ஏரி வறண்டு காணப்படுகிறது.

வண்டலூர் பெரிய ஏரியை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வண்டலூர் ஊராட்சி பொதுமக்கள், கலெக்டருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது. வண்டலூர் பெரிய ஏரி எதிரில் பிரமாண்டமான பஸ் நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பஸ் நிலையம் கட்டுவது கைவிடப்பட்டது. ஆனால் ஏரியின் இருபுறமும் வண்டலூர் - வாலாஜாபாத் சாலை, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையுடன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏரி வறண்டு தண்ணீரின்றி இருக்கிறது. மேலும், ஏரியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளது. இதில் சீமை கருவேல மரங்களும் அடர்த்தியாக காணப்படுகிறது.

குறிப்பாக ஏரியில் உள்ள டாஸ்மாக் கடையால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளது. குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு தினமும் எரிக்கப்படுகிறது. இதையொட்டி, மழை காலங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலை உள்ளது.எனவே வண்டலூர் ஏரியை தூர்வாரி, புனரமைப்பு பணிகள் செய்ய  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

காணாமல் போன சித்தேரி, தாமரை குளம்
வண்டலூர் - வாலாஜாபாத் செல்லும் சாலையோரத்தில் இருந்த சித்தேரி, தாங்கல் ஏரி, நோய் தீர்க்கும் தாமரை குளம் ஆகியவற்றை அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் உதவியோடு பலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2006ம் ஆண்டு முதல் பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்துவிட்டனர். இதனால், சித்தேரி, தாங்கல் ஏரி, நோய் தீர்க்கும் தாமரை குளம் ஆகியவை காணாமல் போய்விட்டன.    

Tags : Drywari ,lake ,Sultanate of Sultan ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு