×

செய்யூர் தாலுகாவில் உள்ள ஊராட்சிகளில் சேதமாகி காட்சிப் பொருளாக கிடக்கும் குடிநீர் தொட்டிகள்

செய்யூர், பிப். 2: செய்யூர் தாலூகாவில் உள்ள ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு பயன்படாமல். பழுதாகி உடைந்து கிடக்கும் தண்ணீர் தொட்டிகளை கோடை காலம் துவங்குவதற்கு முன் சரி செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். செய்யூர் தாலூகாவில் சித்தாமூர், லத்தூர் ஆகிய ஒன்றியங்களும், இடைக்கழிநாடு பேரூராட்சியும் அமைந்துள்ளது. 2 ஒன்றியங்களில் 80க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும், பேரூராட்சியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. அனைத்து ஊராட்சிகள் மற்றும் கிராமங்களில் குடிநீர் தேவைக்காக சிறுமின் மின்சாரத்துடன் கூடிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான தொட்டிகள் சேதமடைந்து பொதுமக்களுக்கு பயன்படாமல் உள்ளன.

பொதுமக்களுக்கு பயனாக இருந்த பல தண்ணீர் தொட்டிகள் மின் பழுது காரணமாக குடிநீர் விநியோகிகாமல் உள்ளன. இதனை சீரமைக்க கோரி கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகங்களிடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்தள்ளது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில்,” பழுதான தண்ணீர் தொட்டிகளை மாற்றி அமைத்து, மின்பழுதை சரி செய்ய கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதிகாரிகள், அதற்கான நிதியை அரசு ஒதுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகின்றனர்.

கோடை காலங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படும்போது, ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய குடிநீர் தொட்டிகள் மட்டுமே பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் நிலை உள்ளது. அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காதது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்தாண்டு பருவ மழையும் பொய்த்ததால், வரும் கோடை காலத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கோடை காலம் வருவதற்கு முன் ஊராட்சிகளில் பழுதான குடிநீர் தொட்டிகள் சரி செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Cheyur Taluk ,
× RELATED காஞ்சியில் லேசான மழை