×

வேகமாக பரவும் அம்மை நோய் தடுப்பது எப்படி? பொதுசுகாதாரத்துறை விளக்கம்

திருவள்ளூர், பிப். 2: பனி, வெயில் என சீதோஷ்ண நிலை காரணமாக பலருக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.பருவமழை காலத்தைத் தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் குளிர் காலங்களாகும். தற்போது பகலில் வெயில், இரவில் பனி காரணமாக உடலில் ஏற்படும் மாறுதல்களால் பலருக்கு அம்மை நோய் வருகிறது. உடலில் ஏற்படும் உஷ்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த அம்மை நோய்.
அம்மை நோய் வருவதற்கு முன்பே ஜூரம், தலைவலி, உடல்வலியால் அவதிப்படுவர். அதன் பின்னர் தான் அம்மை போட்டிருப்பது நம் கண்ணுக்குத் தெரியும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டால் தொடர்ந்து அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எளிதில் தொற்றிக் கொள்கிறது. இது வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடியது என்பதால் சுலபமாக காற்றிலேயே மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பேரம்பாக்கம், நரசிங்கபுரம் உட்பட பல கிராமங்களில் அம்மை நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் அம்மை நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பழம் மற்றும் சத்துள்ள உணவு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் அம்மை நோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம். இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் கூறுகையில், ‘’பருவநிலை மாற்றத்தால் அம்மை நோய் வருவது வழக்கமான ஒன்று. தற்போது அலோபதியில் சிகிச்சை அளிக்க மருந்துகள் வந்து விட்டன. வைரஸ் கிருமிகளான அம்மை நோயைக் கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தழும்பு, எரிச்சல் இல்லாமல் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த பல வகை மருந்து வந்து விட்டது. சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள் நல்ல சுகாதாரமான இடத்தில் இருக்க வேண்டும். வைட்டமின்கள் அதிகமுள்ள உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இவைகளை கடைபிடித்தாலே அம்மை சரியாகி விடும்’’என்றார். 

Tags :
× RELATED திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கம்...