×

குளத்தூர்-கீழவைப்பார் சாலையில் தரமற்ற சாலையால் விபத்து அபாயம்

குளத்தூர், பிப்.1: குளத்தூரிலிருந்து கீழவைப்பார் செல்லும் சாலையின் பாலத்தில் போடப்பட்ட தரமற்ற தார் சாலையால் அடிக்கடி ஏற்படும் விபத்து ஏற்படுவதால் அதை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலை பிரிவிலிருந்து  கீழவைப்பார் மீனவர் கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த 20 வருடங்களாக சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் இப்பகுதியை சேர்ந்த கல்லூரணி, வைகுண்டபெருமாள்புரம், சிப்பிகுளம், கீழவைப்பார் பொதுமக்கள் இந்த சாலையை தவிர்த்து வைப்பார் மற்றும் பனையூர் வழியாக சுற்றி குளத்தூர் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பல வருடங்களாக அதிகாரிகளிடம் கொடுத்த பலனாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென சாலை பணிகள் ஆரம்பித்து மேற்கொண்டனர். இந்நிலையில் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையில் மூன்று தரைமட்ட பாலங்களை உயர்த்தி அமைக்கப்பட்டது. பாலத்தின் மேல் போடப்பட்ட தார்சாலையில் போதிய அளவு தார் கலவையில்லாததால் ஜல்லி கற்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் ஜல்லி கற்களை விரித்தது போல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் டூவீலர்கள் மற்றும் சைக்கிளில் செல்வோர் தடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விபத்துகளை தவிர்க்கும் விதமாக பாலத்தின் மேல் கிடக்கும் ஜல்லி கற்களை அகற்றி தரமான தார்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road accident ,road ,Kulathoor-Keezhipar ,
× RELATED கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில்...