×

பிளவக்கல் அணைக்கு வைகை தண்ணீர் கொண்டுவர வேண்டும்

விருதுநகர், பிப்.1: பிளவக்கல் அணைக்கு வைகை தண்ணீரை கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் படிக்கான்சுவைத்தான்பட்டியை சேர்ந்த விவசாயி கர்ணன் பேசுகையில், ‘‘படிக்கான்சுவைத்தான்பட்டியில் கண்மாய் தூர்வாரும் பணி தொய்வடைந்து இருக்கிறது. பணிகளை சரிவர செய்யவில்லை’’ என்று புகார் தெரிவித்தார்.அதற்கு வைப்பாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர், ‘‘கண்மாய் பராமரிப்பதற்கான முதல்கட்ட நிதி தீர்ந்துவிட்டது. அடுத்தக்கட்ட நிதி வந்த பின்பு அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்’’ என்றார்.மேலும் கலெக்டர் சிவஞானம், ‘‘படிப்படியாக கண்மாய்களும், வரத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. தற்போது ராஜபாளையம் பகுதியில் அந்த பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில்ஏதேனும் குறைகள் இருந்தால் கூறுங்கள். நிவர்த்தி செய்வோம்’’ என்றார்.வத்திராயிருப்பை சேர்ந்த விவசாயி செல்லச்சாமி பேசுகையில், ‘‘விருதுநகர் மாவட்டம் முற்றிலும் வறட்சி மாவட்டமாக இருக்கிறது. மாவட்டத்தில் இருக்கக்கூடிய பிளவக்கல் அணையில் சரியாக நீர்வரத்து இருப்பதில்லை. இந்த வருடம் 3 நாள் மழையினால் கிடைத்த நீர் மட்டும்தான் இருக்கிறது.
இதனை சரி செய்வதற்கு மூல வைகை ஆற்றில் இருந்து அரசரடி வழியாக பிளவக்கல் அணைக்கு கால்வாய் அமைத்து தண்ணீரை கொண்டு வந்தால் விருதுநகர் மாவட்டம் செழிப்பாகும். வெறும் ஒன்றரை கிலோமீட்டர் தூரம்தான் இந்த பணியை நாம் செய்ய வேண்டியதிருக்கும்’’ என்றார்.

இதற்கு கலெக்டர், ‘‘ஏற்கனவே இருக்கக்கூடிய திட்டங்கள் பற்றிய விவாதங்கள் மட்டும் செய்வோம். புதுப்புது திட்டங்களை பற்றி கூற வேண்டாம்’’ என்றார்.அதன்பின்பு வைப்பாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கூறுகையில், ‘‘ஏற்கனவே ஒரு கிலோ மீட்டருக்கான பணி முடிந்துவிட்டது. அடுத்தக்கட்ட பணியை நிதி ஒதுக்கப்பட்ட பிறகு செய்து முடித்துவிடலாம்’’ என்றார்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த முருகன் கூறுகையில், ‘‘ராஜபாளையம் பகுதி முழுவதும் மாம்பழம் பயிரிடப்பட்டு இருக்கிறது. இந்த மாம்பலத்திலிருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை ராஜபாளையத்தில் அமைக்க வேண்டும்’’ என்றார். இதற்கு வேளாண் இணை இயக்குனர், ‘‘இது பற்றிய முடிவுகளை உழவர் உற்பத்தியாளர் திட்டம் எடுக்க வேண்டும். அதனால் அவர்கள் அதைச் செய்வார்கள்’’ என்று கூறினார்.உடனே விவசாயி முருகன், ‘‘உழவர் விற்பனை திட்டத்தின்கீழ் நடத்தப்பட வேண்டுமென்று ஆண்டு முழுவதும் கூறுகிறீர்களே. அந்த திட்டத்தின்கீழ் என்ன செயல்பாடு நடந்திருக்கிறது?’’ என்று கேட்டார்.
இதற்கு வேளாண் இணை இயக்குநர், ‘‘இந்த திட்டத்தின்கீழ் மொத்தமாக பத்து சதவீத பணிகள்தான் நடைபெற்றிருக்கிறது. ஆனால் இந்த உழவர் விற்பனை திட்டம் மட்டுமே மதிப்புக் கூட்டுப் பொருள் செய்வதற்கான தொழிற்சாலை அமைப்பதற்கு முடியும். எனவே கூடிய விரைவில் அமைக்கப்படும்’’ என்று கூறினார்.


Tags : Blaze Dam ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி