×

சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு சிதிலமடைந்த அஞ்சநாச்சி அகஸ்தீஸ்வரர் கோயில்

கரூர்,பிப்.1: கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் உள்ள பழமை வாய்ந்த அஞ்சநாச்சி அகஸ்தீஸ்வரர் கோயிலை பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் திருமணிமுத்தாறு, அமராவதி ஆகிய இரண்டு ஆறுகளும் காவிரியுடன் கலக்கிறது. மூன்று ஆறுகள் ஒரே இடத்தில் கலப்பது ஒரு விசேஷம் என்றால், மற்றொரு முக்கிய விஷேசமும் இந்த ஊருக்கு உள்ளது.அது, சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுபவரும், அகஸ்தீயரே, தன் கையால் மணலை சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலமாகவும் கூறப்படும் இந்த அஞ்சநாச்சி அகஸ்தீஸ்வரர் கோயிலும் மற்றொரு சிறப்பாக இந்த பகுதியில் விளங்கி வருகிறது.அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள இந்த கோயில், கிபி 10, 11ம் நூற்றாண்டு காலத்தில், சேரர், சோழர், பாண்டியர் மற்றும் சோமூர் குறுநில மன்னர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் நிறுவப்பட்டு வணங்கப்பட்டு வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.மூன்று நந்திகள் உள்ள ஒரே கோயில், பெண் தெய்வத்தின் எதிரே நந்தி அமர்ந்திருக்கும் ஒரே கோயில் என்ற பல்வேறு பெருமைகள் இந்த கோயிலுக்கு உள்ளன. 15 அடி உயரத்துக்கும் அதிகமான சுற்றுச்சுவர் கொண்ட கோயில் என பல்வேறு பெருமைகள் இந்த கோயிலுக்கு இருந்தாலும் தற்போது கோயிலின் உட்புறம், வெளிப்புறம் என போதிய பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த கோயிலுக்கு மற்றொரு சிறப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலின் உட்புறம் உள்ள இரண்டு கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை இந்த கோயில் விழாவின் போதுதான் எழுப்பப்பட்டது. இந்த பிரச்னை அப்போது, தமிழகம் முழுதும் எதிரொலித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.15 அடி உயரத்துடன் கூடிய இந்த கோயில் சுற்றுச்சுவரின் பெரும்பாலான பகுதிகள், 1977ம் ஆண்டு வந்த வெள்ளத்தின் போது, அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால், கோயிலின் பின்புறம் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லலாம் என்ற நிலைதான் உள்ளது. மேலும் கோயிலின் உட்புறம் பழங்காலத்தூண்களுடன் கூடிய திருமண மண்டபமும் உள்ளடக்கிய கோயில்களில் இதுவும் ஒன்று. மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்பட்டு வரும் இந்த கோயிலின் நிலை தற்போது மோசமான நிலையில் உள்ளது. இந்த கோயிலை புனரமைப்பு செய்து, அனைத்து நேரமும் பூஜைகள் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். மேலும், தொல்லியல்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் நிலை குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வார்களா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அகஸ்தீஸ்வரர் கோயில் ஆலயத்தில் அகத்தியர் குருபூஜை விழா தமிழ் முறையில் நடத்த வேண்டும் என சோமூரில் உள்ள குருதேவா அறக்கட்டளை நிர்வாகிகள் கோயில் அதிகாரிகளிடம் அனுகி அனுமதி கேட்டிருந்தனர். கோயில் ஸ்திரத்தன்மை குறைபாடு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை காரணம் காட்டி மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, 100 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கோயிலை புனரமைக்க, தொல்லியல்துறை அனுமதி பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தேவையான பூஜைகள் நடத்திடவும் அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Ciramaikkappatuma ,Anjaneya Agastheeswarar Temple ,devotees ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி