×

திருத்தணியில் அடுத்தடுத்து 2 வார்டுகளில் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

திருத்தணி, பிப். 1: திருத்தணி நகராட்சி 20வது வார்டில் அமிர்தாபுரம், சித்தூர் ரோடு,  பஜார் தெரு, திருவள்ளுவர் தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. இங்கு 500க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 20வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்ததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று திருத்தணி-சித்தூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்.இன்ஸ்பெக்டர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முகமது யாசர் அராபத், நகராட்சி பிட்டர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது20வது வார்டுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர்.  இதேப்போல், திருத்தணி நகராட்சி 4வது வார்டு காந்தி ரோடு செகன்ட் லைனில் கடந்த சில நாட்களாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் நேற்று திருத்தணி காந்தி மெயின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து, மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : women ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...