×

இயற்கை பேரிடர் ஆபத்தை தடுக்க மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் மீனவர்கள் எதிர்பார்ப்பு

சேதுபாவாசத்திரம், ஜன.31: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் வரும் காலங்களில் இயற்கை பேரிடர் ஆபத்துகளை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் சார்பில் மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜுதீன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுக விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஆற்று முகத்துவாரங்களில்தான் துறைமுகங்கள் அமைந்துள்ளது. ஆறுகள் இல்லாத பகுதிகளில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மல்லிப்பட்டினத்தில் துறைமுக விரிவாக்க பணிகள் தொடங்கும் முன்பாக தூண்டில் வளைவு அமைத்து கொடுத்தால்தான் படகுகள் பேரிடர் மூலம் வரும் ஆபத்துகளை தடுக்க முடியும் என மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளிடமும் முறையிட்டு பல்வேறு மனுக்கள் கொடுத்துள்ளோம்

ஆனால் அவை அனைத்தும் பயனின்றி போய்விட்டது. இதனால்தான் தற்போது ஏற்பட்ட கஜா புயலில் மிகப்பெரும் சேதத்தை மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் சந்திக்க வேண்டியிருந்தது. முழுமையாக சேதமடைந்த படகுகள் அனைத்தும் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில்தான். எனவே வரும் காலங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர்களை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags : harbor ,Mallipattinam ,
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...