ஓமலூர் அருகே பல்பாக்கியில் காளியம்மன் கோயில் திருவிழா தேரோட்டம்

ஓமலூர், ஜன.31:  ஓமலூர் அருகே பல்பாக்கி கிராமத்தில் காளியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.ஓமலூர் அருகே பல்பாக்கி கிராமத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓம் காளியம்மன், மகா மாரியம்மன் கோயில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் சக்தி கரகம் எடுத்தும், சாமி ஊர்வலம் நடத்தியும், பொங்கல் வைத்தும், எருமை கிடா பலியிட்டும் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அலகு குத்தலும், அக்னி கரகம் எடுத்தலும், மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள முனியப்பன் சுவாமிக்கு பக்தர்கள் வேண்டுதல் வைத்து ஆயிரக்கணக்கான கோழிகளை பலியிட்டனர். இதனைத்தொடர்ந்து தேரோட்ட விழா நடைபெற்றது. இதில், காளியம்மனுக்கு தனியாக ஒரு தேரும், மாரியம்மனுக்கு தனியாக ஒரு தேரும் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வடம்பிடித்து இழுத்தனர். விழாவில் வெற்றிவேல் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


× RELATED காளியம்மன் கோயிலில் திருநடன திருவிழா