அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி -பாதுகாப்பு படை அதிகாரிகள் அடுத்த வாரம் வருகை

கன்னியாகுமரி, ஜன.31 : குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ம் தேதி (செவ்வாய்) குமரி மாவட்டம் வருகிறார்.₹40 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ஏற்கனவே முடிந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலம், காவல்கிணறு - தோவாளை இடையே முடிவடைந்துள்ள நான்கு வழிச்சாலை உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைக்கிறார். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் 6 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எந்த பகுதியில் நிகழ்ச்சியை நடத்தலாம் என்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளும் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.இதற்காக இந்த மைதானத்தை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தை தயார்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. பிரதமர் மோடி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் இறங்கி, நிகழ்ச்சிக்கு வர வசதியாக கன்னியாகுமரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் குமரி மாவட்டம் வர உள்ளனர். அவர்கள் பிரதமர் பங்கேற்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள மைதானத்தை பார்வையிட உள்ளனர். அவர்களின் ஒப்புதல் கிடைத்ததும் ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கும் என தெரிகிறது. அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, கட்சி நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஒரே மைதானத்தில் இரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனியாக மேடை அமைக்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. கட்சி நிகழ்ச்சியில் பெருமளவில் தொண்டர்களை திரட்டும் பணியில் பா.ஜ. நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக தற்போது பா.ஜ. சார்பில் கட்சி ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2014 ல் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக  மோடி, கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி அருகே ஏழுச்சாட்டுப்பத்து மைதானத்தில் அவர் தேர்தல் கூட்டத்தில் பேசினார். பின்னர் 2016 ல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக இதே மைதானத்தில் பிரதமர் மோடி, பேசினார். கடந்த 2017 ல் ஓகி புயல் பாதிப்பை தொடர்ந்து அவர் குமரி மாவட்டம் வந்தார். தற்போது 4 வது முறையாக பிரதமர் மோடி, குமரி மாவட்டம் வர உள்ளார்.

Related Stories:

>