×

ஜாக்டோ ஜியோ போராட்டம் ஏராளமான போலீசார் குவிப்பு

காஞ்சிபுரம், ஜன.31: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான்கேட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், ஊரக வளரச்சித்துறை அலுவலர் சங்க செயலாளர் சார்லஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது உசேன், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கவிதா, பக்கிரி, இராமச்சந்திரன், பேபி, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜன.22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரைற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்படுவதை உடனே வழங்கிட வேண்டும், தொடக்க கல்வித்துறையை பள்ளிக் கல்வித்துறையோடு இணைத்ததைக் கைவிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பணிக்கு அனுப்பும் நடவடிக்கையைக் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பம் பெறப்பட்டது.

மேலும் ஜன.29 மாலை 5 மணிக்குள் பள்ளிக்கு ஆசிரியர்கள் திரும்பாவிட்டால் அந்தப் பணியிடம் காலிப் பணியிடமாக அறிவித்து மாற்று ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையும், நேற்று காலையும் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர். இருப்பினும் நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள காவலான்கேட் பகுதியில் அரசு ஊழியர்கள் மறியல் செய்ய திட்டமிட்டனர்.

எனவே, போராட்டக்காரரர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் விதமாக கலெக்டர் அலுவலக 2 நுழைவாயில்கள், கலெக்டர் அலுவலக வளாகம், காவலான்கேட் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலைக்கு வரும் வழியை பேரிகார்டு கொண்டு போலீசார் சுற்றி வளைத்து அரண் அமைத்தனர். இதனால் வேறு வழியின்றி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சரவணபவன், ராமமூர்த்தி உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு...