×

திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா

திருக்கழுக்குன்றம், ஜன.31: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 80 கிலோ மீட்டர் நீண்ட பாலாறு ஓடுகிறது. திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம், ஆயப்பாக்கம் வாயலூர் வழியாக ஓடும் இந்த பாலாற்றில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கமுடியாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது.
பாலாற்றை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் விவசாயிகள் என்பதாலும்,  விவசாயத்தை நம்பியே உள்ளதாலும் (வறட்சி காலங்களில்) கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடுவதால் பிரதான தொழிலான விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வறுமை நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் இந்தப் பாலாற்றுப் பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள்  உள்ளிட்டோர் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடியும், அரசுக்கு கோரிக்கையும் வைத்து வந்த நிலையில் கடந்தாண்டு வண்டலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட  பாலாற்றுப் பகுதிகளில் 7   தடுப்பபணைகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அதன்படி திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள வல்லிபுரம் - ஈ.சூர் இடையேயான பாலாற்றில் ரூ.30 கோடியே 95 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடந்தது.  விழாவிற்கு காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.   விழாவில் சிறப்பாளராக கலந்து கொண்ட ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், காஞ்சி மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆறுமுகம், காஞ்சிபுரம் எம்பி மரகதம்குமரவேல்,    மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி ஆகியோர் தடுப்பணை பணிக்கான அடிக்கல் நாட்டினர். விழாவில் முன்னாள் எம்எல்ஏ தனபால், மாவட்ட பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம்,   மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்வந்த்ராவ்,   மஞ்சுளா ரவிக்குமார், திருக்கழுக்குன்றம் தாசில்தார் வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமளா, தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,Thirukkurukkulam ,Palar ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா