×

மாவட்ட நிர்வாகம் உத்தரவை மீறி பூட்டிக் கிடந்த ஆர்டிஓ அலுவலகம்: ரணியில் பொதுமக்கள் அவதி

ஆரணி, ஜன.31: மாவட்ட நிர்வாக உத்தரவையும் மீறி, நேற்று ஆர்டிஓ அலுவலகம் பூட்டிக் கிடந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆரணி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட போளூர், ஆரணி, ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகாக்களுக்கு, ஆரணியில் ஆர்டிஓ அலுவலகம் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. பிறப்பு, இறப்பு, இருதரப்பினர் மோதல், இடம் சார்ந்த பிரச்னைகள் குறித்த விசாரணை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தபடியாக ஆர்டிஓ அலுவலகம் செயல்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை முதல் மதியம் வரை ஆரணி ஆர்டிஓ அலுவலகம் திறக்கப்பட்டிருந்தது ஆனால், மதியம் 2 மணிக்கு மேல் அலுவலகம் திடீரென பூட்டியிருந்தது. இதனால், பல்வேறு கிராமங்களில் இருந்து தங்களது பணி நிமித்தமாக வந்திருந்த பொதுமக்கள் அலுவலம் மீண்டும் திறக்கப்படும் என காத்திருந்தனர். ஆனால், மாலை 5 மணி வரையிலும் அலுவலகம் திறக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தாலும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் திறந்து வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆரணி ஆர்டிஓ அலுவலகம் அந்த உத்தரவை மீறி நேற்று மதியம் முதல் பூட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : RTO ,Ranil ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...