×

நாமக்கல் கிளைச்சிறையில் பரபரப்பு கைதியிடம் ரத்த கையெழுத்து வார்டன்கள் அதிரடி மாற்றம்

சேலம், ஜன. 30:   நாமக்கல் கிளைச்சிறையில் மோசடி கைதியிடம் ரத்த கையெழுத்து வாங்கிய  விவகாரம் தொடர்பாக சிறை வார்டன்கள் 2 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் கிளைச்சிறையில் மோசடி வழக்கில் கைதான நபர் ஒருவர் அடைக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த மாதம் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்திய விசாரணையில் அக்கைதி பரபரப்பு தகவலை தெரிவித்தார். அப்போது, ‘‘சிறை வார்டன் பவித்ரன், அவரது நண்பர் என்னால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறி மிரட்டி என்னை அடித்தார். மேலும் எனது ரத்தத்தை எடுத்து அதில் கடிதம் ஒன்றை எழுதினார்,’’ என கூறினார்.

இது தொடர்பாக சிறை விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள், சென்னை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினர். இதற்கிடையில் ஜாமீனில் வெளியே சென்ற அந்த மோசடி கைதி,’ தனது ரத்த கடிதத்தை தருமாறு வக்கீல் மூலம் சிறை அதிகாரிகளை தொடர்ந்து கேட்டு வந்தார். குறிப்பாக தொடர்ந்து ‘எனது கடிதத்தை கொடுங்க..’ என கேட்டு வந்தார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் சிறை அதிகாரிகள் கடும் திணறி வந்தனர். மேலும், சிறை வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிளைச்சிறை கண்காணிப்பாளர் தட்டிக்கழித்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் வார்டன் பவித்ரன், நான் ரத்த கையெழுத்து எதுவும் வாங்கவில்லை. கைதி பொய் சொல்கிறார், என கூறினார். இந்நிலையில் வார்டன்கள் பவித்ரன், எழில் ஆகியோரை அதிரடியாக இடமாற்றம் செய்து சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார். பவித்ரன் குன்னூர் கிளைச்சிறைக்கும், எழில் கூடலூர் கிளைச்சிறைக்கும் மாற்றப்பட்டனர். இச்சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : branch ,blood transfusion warders ,Namakkal ,prisoner ,
× RELATED போலீஸ் தாக்குதலில் பலியான ஓட்டுநர்...