×

ஜாக்டோ- ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.30:  கிருஷ்ணகிரியில் ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதனிடையே பணிக்கு உடனடியாக திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1712 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 72 பேரை அன்று இரவு கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரையும் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார். ஆனால் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன் கூறுகையில், புதிய ஓய்வூதிய திட்டம் என்பது 2003ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்படி ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்து, அத்துடன் அரசின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையை சேர்த்து, அதை தனி நிதியாக திரட்டி முதலீடு செய்ய வேண்டும்.

இப்படி சேரும் பணம் ஊழியர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அவருடைய மாத சம்பளத்தில் 40 சதவீதம் என்னும் கணக்கில் ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தை அமுல்படுத்தினால் அரசு ஊழியர்களுக்கு கிராஜுட்டி, குடும்ப பென்சன் போன்ற சலுகைகள் கிடைக்காது. எனவே, இதை நாங்கள் எதிர்க்கிறோம். மேலும் 2003ம் ஆண்டிலிருந்து ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் இதுவரை ஊழியர்களின் கணக்கில் காட்டவில்லை. 36 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் அந்த பணம் என்ன ஆயிற்று என்று அரசு விளக்கம் அளிக்கவில்லை. எங்கள் பணத்தை எங்கள் கணக்கில் காட்ட வேண்டும். இதை வலியுறுத்தியே இந்த தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

Tags : Demonstration ,
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்