×

பண்ணைப்பட்டியில் மாணவர்கள் சாலைமறியல்

பழநி/கோபால்பட்டி, ஜன.30:  சாணார்பட்டி அருகே போராட்டம் காரணமாக பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் பெற்றோர்கள், மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வந்தபோதிலும், சில இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. சாணார்பட்டி அருகே பண்ணைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இங்கு  150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.  இவர்களுக்காக 6 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் பணிக்கு  வராததால் பள்ளி திறக்கப்படவில்லை. எனவே இவற்றை திறக்கக்கோரி மாணவர்கள்  நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் போலீசார் நேற்று  பள்ளி திறப்பதாக வாக்குறுதி அளித்தனர்.ஆனால் நேற்று 11 மணி  வரையும் ஆசிரியர்கள் வராமல் பள்ளியும் திறக்கப்படவில்லை. இதனால்  ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாணவ, மாணவியருடன் பண்ணைப்பட்டி பிரிவு அருகே  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்-செங்குறிச்சி சாலையில்  சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இது குறித்து  மாணவர் கண்ணன் கூறுகையில், ‘‘கடந்த ஒரு வாரமாக பள்ளி திறக்கவில்லை. இதனால்  படிப்பு பாதித்துள்ளது. நேற்று வந்த ஆசிரியர்கள் பள்ளியை திறக்காமல்  மாணவர்களை பார்க்க மட்டும் வந்ததாக கூறிச் சென்றனர். இதனால் இப்பள்ளியில்  பழைய ஆசிரியர்களை நீக்கிவிட்டு புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.  தொடர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம்’’  என்றனர். இதேபோல், பழநி அருகே மானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால், கடந்த பொங்கல் பண்டிகையில் இருந்து பள்ளி திறக்கப்படவே இல்லை. பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் பள்ளி பூட்டப்பட்டுள்ளது.மாணவ-மாணவிகள் மதியம் வரை பள்ளியின் முன்புறம் அமர்ந்து படித்து விட்டு செல்கின்றனர். தேர்வு நேரம் நெருங்கி வரும் நிலையில் ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாரிமுத்து என்பவர் கூறுகையில், ‘‘பள்ளிக்கு ஆசிரிர்கள் யாரும் வருவதில்லை. பள்ளி 10 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பூட்டப்பட்ட பள்ளியை திறக்க வேண்டும். ஆசிரியர்கள் போராட்டம் தொடருமானால் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டியதிருக்கும்’’ என்றார்.


Tags : farmhouse ,
× RELATED கலிஃபோர்னியாவில் 102 ஏக்கர் பண்ணை...