×

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோவினர் ஆர்ப்பாட்டம்

நாகை, ஜன. 30: புதிய  ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய  ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். சத்துணவு ஊட்டச்சத்து ஊழியர்கள்,  வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியக்குழுவில்  வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடைநிலை  ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான  ஊதியம் வழங்க வேண்டும். 3,500  தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும்,  3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும்.   அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி,  வகுப்புகளுக்கு மத்திய அரசின்  முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி  ஆசிரியர்களை  பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ  கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டவர்களில் 40 பேர் கைது  செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இதில் 3 பேருக்கு உடல்நிலை  பாதிக்கப்பட்டதால் 37 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் நேற்று  நாகை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்  சங்க மாநில பொது குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் தலைமையில் ஜாக்டோ ஜியோவினர் ஆர்ப்பாட்டம்  நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில  மகளிரணி பொறுப்பாளர் சித்திராகாந்தி,  தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட  தலைவர் நாகராஜன், தமிழ்நாடு அரசு உழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி  உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 5 நிமிடத்துக்குள் முடித்து விட்டு கலைய வேண்டும் என்றனர். இதையடுத்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Zakto Giovanni ,
× RELATED தஞ்சையில் மறியல் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோவினர் 1,800 பேர் கைது