×

கத்தாரில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி மீனவர்கள் உட்பட 5 பேர் சொந்த ஊர் வருகை

நாகர்கோவில், ஜன.30: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சொந்த ஊர் வந்து சேர்ந்தனர். ஈரானில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் சுதர்சன்(37), தூத்தூக்குடி மாவட்டம் பெரியதாழையை சேர்ந்த பிளான்சிவாஸ் மகன் சுதர்சன்(51), குணசேகர் மகன் பிரதீப்(38), நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த சமாதானம் மகன் சாந்தாகுரூஸ்(36), கூட்டப்புளியை சேர்ந்த அருளப்பன் மகன் சுபாஷ்(29) ஆகிய 5 மீனவர்கள் எல்லை தாண்டியதாக கத்தாரில் சிறை பிடிக்கப்பட்டனர். ஜனவரி 13ம் தேதி கைதான மீனவர்கள் 5 பேரும் இந்திய தூதரக முயற்சியால் கத்தார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் டெல்லி விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து சேர நிதியுதவி இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த மீனவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையில் இந்த மீனவர்களை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சக ஆணையர் மேற்கொண்டார். அதன்படி நேற்று மாலையில் 4.40 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் வாயிலாக 5 பேரும் இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து தமிழக மீன்துறை ஏற்பாடு செய்த வாகனத்தில் வாயிலாக அவர்கள் இரவு நாகர்கோவில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் குமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags : females ,fishermen ,Kumari ,Kathar ,
× RELATED பிரதமர் வருகை – குமரி மீனவர்கள் மீன்பிடிக்க தடை