×

ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் கருவேல மரங்களை அகற்ற வழக்கு கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆலங்குளம், ஜன. 30:  ஆலங்குளம் காவல் நிலையம் அருகே நெல்லை - தென்காசி சாலையில் தொட்டியான்குளம் உள்ளது. மழை காலங்களில் குற்றாலத்தில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் இக்குளத்திற்கு வரும். இதன் மூலம் 12,046 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் இப்பகுதி நிலத்தடி நீராதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த குளம் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் பராமரிப்பு இல்லாததால் குளத்தின் கரைகளும் வலுவிழந்து காணப்படுகின்றன. இதனால் குளத்தில் அதிகளவு தண்ணீரை சேமிக்க முடியாத சூழலும் உள்ளது. இரவு நேரங்களில் தொட்டியான்குளம் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனிடையே ஆலங்குளத்தை சேர்ந்த ஞானராஜ் மகன் பிரதீப்(26) என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குளத்தில் கருவேல மரங்களை அகற்றி  தூர்வார கோரி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோரது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் பிரதீப் சார்பில் வழக்கறிஞர்கள் உதயகுமார், சாந்தகுமார் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருவேல மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருகிற 18ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு பொதுப்பணித்துறை செயலாளருக்கும், நெல்லை கலெக்டருக்கும் உத்தரவிட்டனர்.

Tags : case collector ,removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...