×

வெளிமாநில கல்வி சுற்றுலா பெங்களூருக்கு 90 மாணவர்கள் பயணம்

தஞ்சை, ஜன. 29: வெளிமாநில கல்விச் சுற்றுலாவாக பெங்களூருக்கு 90 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான் என்ற தலைப்பின்கீழ் வெளிமாநில அறிவியல் மையங்களை பார்வையிட மாணவர்களை அழைத்து செல்ல மாநில அளவில் மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி.யுடன் இணைந்து திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படிஅன்றாட பள்ளி செயல்பாடுகளை தாண்டி மாணவர்கள் நேரடியாக அறிவியல், கணிதம் சார்ந்த மையங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட செய்து மாணவர்களின் சிந்தனை மற்றும் படைப்பாற்றலை தூண்டுவதும், மாணவர்களிடையே குழு மனப்பான்மையை உருவாக்குவதுமே இக்கல்வி சுற்றுலாவின் நோக்கமாகும்.இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் அறிவியல் கண்காட்சிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள், போட்டி தேர்வுகளுக்காக நடத்தப்படும் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், இன்ஸ்பையர் அவார்டு போன்ற விருதுகள் பெற்ற மாணவர்கள், பள்ளிகளில் செயல்படும் மன்றங்களில் ஆர்வமுடன் பங்குபெறும் மாணவர்கள் என்று 90 மாணவர்கள் மற்றும் 9 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிமாநில கல்வி சுற்றலாவுக்கு பெங்களூருவுக்கு நேற்று புறப்பட்டனர்.
இவர்களை முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வழியனுப்பி வைத்தார். இம்மாணவர்கள் பெங்களூருவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், விஸ்வேஷ்வரயா தொழில்நுட்பப் பூங்கா, அரசு அருங்காட்சியகம், இந்திய வானூர்தி நிறுவனம் உள்ளிட்ட இடங்களை 2 நாட்கள் பார்வையிடுகின்றனர்.

Tags : Bengaluru ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்