×

கல்லூரி மாணவன் வெட்டி கொலை


சென்னை: கல்லூரி மாணவனை ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படு கொலை செய்து கீரப்பாக்கத்தில் உள்ள கல் குவாரியில் வீசியுள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளது.  இந்நிலையில், 7ம் நம்பர் கல்குவாரியில் நேற்று காலை 11 மணி அளவில் ஆண் சடலம் கிடப்பதாக காயார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜ், திருப்போரூர் இன்ஸ்பெக்டர்  கண்ணன், காயார் எஸ்ஐ சுசிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மறைமலைநகர் பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது.தலையில் பலத்த வெட்டு காயம் இருந்தது.  கை, கால்களுடன் சேர்த்து கற்களும் கட்டப்பட்டு உடல் குவாரியில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். அதன்  பின்னர் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் அந்த நபரின் புகைப்படத்தை அனுப்பி விசாரித்தனர்.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனி 11வது தெருவை சேர்ந்த கார்த்திகேயனின் மனைவி சங்கரி என்பவர் ஆதம்பாக்கம் ேபாலீசில் புகார் செய்திருந்தார். புகாரில், ‘’எனது மகன் சரவணன் (21)  தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினிரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறான். வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற தனது மகன் வீடு திரும்பவில்லை, கண்டுபிடித்து தர வேண்டும்’’ என்று  கூறியிருந்தார்.சமூக வலைதளத்தில் பரவி வந்த புகைப்படமும், இறந்த நபரின் புகைப்படமும் ஒன்றாக இருந்ததால் சங்கரியின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டனர். அவர்களும் விரைந்து வந்து  உடலை பார்த்து விட்டு, ‘’எங்கள் மகன்தான்’’ என்று உறுதிபடுத்தி கதறி அழுதனர்.

சரவணனை கொலை செய்த மர்ம கும்பல் சரவணனின் ₹2 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த பைக் மற்றும் செல்போனுக்காக கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில்  தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது பற்றி சரவணின் பெற்றோர் போலீசாரிடம் கூறுகையில், ‘’கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை சரவணன் வீடு திரும்பவில்லை. அப்போது சாப்பிட வரும்படி அவரது தாய் சங்கரி  மகன் சரவணனிடம் போனில் கூறியுள்ளார். அதற்கு சரவணன் ஒரு மணி நேரம் கழித்து வருவதாக கூறியுள்ளார். ஆனால் ஒரு மணிநேரம் ஆகியும் சரவணன் வரவில்லை. இந்நிலையில் தாய் சங்கரி மீண்டும் போன் செய்த  போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் போன் தொடர்பு டவரை வைத்து கண்காணிக்கையில், போன் கீரப்பாக்கம் பகுதியில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் தேடிவந்தோம். சனிக்கிழமை அன்று பாண்டிச்சேரியில்  இருந்து சரணவனின் செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. ₹5 ஆயிரத்தை தனது அக்கவுன்டில் போடும் படி வந்திருந்தது. அதன் பின்பு போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது’’ என தெரிவித்தனர்.

கல்குவாரிகளில் 5 கொலைகள்: அப்பகுதி மக்கள் கூறுகையில், கீரப்பாக்கத்தில் உள்ள 12க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான கல்லூரி மாணவர்கள்  விடுமுறை நாட்களில் வந்து உல்லாசமாக இருந்து விட்டு செல்கின்றனர். இங்கு கஞ்சா விற்பனையும் நடக்கிறது. இது போன்ற கல்குவாரிகளில் ஏற்கனவே கல்லூரி மாணவர், ஆட்டோ டிரைவர், கஞ்சா வியாபாரி உட்பட 5க்கும்  மேற்பட்டோர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் போலீசார் ரோந்து வரவேண்டும். முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : College student ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது