×

பள்ளி நேரத்தில் இயக்காததால் ஆத்திரம் அரசு பஸ்சை சிறைபிடித்த மாணவர்கள்: பொன்னேரி அருகே பரபரப்பு

பொன்னேரி, ஜன.29: பொன்னேரி அடுத்த கள்ளூர் கிராமத்தில் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அரசு பேருந்து பணிமனையில் இருந்து கள்ளூர், புதுக்குப்பம், தேவம்பேடு, சேலியம்பேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு 4 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதன் மூலம் அப்பகுதி பள்ளி,  கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் குறித்த நேரத்தில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வந்த பேருந்துகளின் நேரத்தை  பொன்னேரி பணிமனை நிர்வாகம் மாற்றி அமைத்தது. மேலும், கள்ளூர் பகுதியில் இரவு தங்கி மறுநாள் காலை இயக்கும் பேருந்துகளையும் பணிமனை திரும்ப பெற்றுவிட்டது. இதனால், அதிகாலையில் பணி நிமித்தமாக பல  பகுதிகளுக்கு சென்று வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

எனவே,  நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி பணிமனை நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், காலையில் பள்ளி,  கல்லூரிகளுக்கு மாணவர்கள், அரசு அலுவலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தேர்வு நெருங்கும் காலத்தில் பஸ் வசதி இல்லாமல் பல மாணவர்கள் பள்ளிக்கே செல்ல முடியாத  அவல நிலை ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று காலை கள்ளூர் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள், காலம் தாழ்த்தி வந்த 3 அரசு பேருந்துகளை சிறைப்பிடித்தனர். ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் பேருந்துகளை  இயக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு பொன்னேரி  பணிமனை நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

 இதே காரணத்திற்காக அந்த வழித்தடத்தில் உள்ள சேலியம்பேடு பெண்கள், 2 பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகள் காலதாமதமாக வருவதாகவும், சில நாட்களில் பேருந்துகள் வருவதில்லை  எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பின்னர் அங்கும் வந்த பொன்னேரி பணிமனை அதிகாரிகள், அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை இயக்கினர். இதனால், நேற்று மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags : Fencing ,school ,Ponneri ,
× RELATED கரூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி...