×

ஜாக்டோ - ஜியோ போராட்டம்: 2,025 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது: தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தீவிரம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்றும் மாறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியறுத்தி  5வது நாளாக நேற்றும் மறியலில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஈடுபட்டனர். இந்நிலையில், மேலும் பல சங்கங்கள் இன்று பங்கேற்றது. இதில், காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்க ஆதரவு தெரிவித்துள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றும் போராட்டம் தொடரும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்  அறிவித்து இருந்தனர். இதையடுத்து தாலுகா அலுவலகம் முன் காலை 7 மணிக்கே 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கைதானவர்களை அழைத்துச்செல்ல தயார் நிலையில் பஸ்களும் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 2,025 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கைது செய்து, வாகனங்களில் ஏற்றி, ஆங்காங்கே உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். தொடர்ந்து, தனித்தனியாக ஒவ்வொருவர்  மீதும் வழக்கு பதிந்தனர். இதில், 105 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மட்டும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை, இனிமேல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற  நிபந்தனையுடன் நீதிபதி விடுதலை செய்தார். .தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தீவிரம்:   இதனிடையே அரசு தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு சம்பளம் ₹10 ஆயிரம் என அறிவித்ததால், பி.எட்., படித்த  பட்டதாரிகளில் ஆண்கள், பெண்கள் என முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் குவிந்தனர். நேற்று மாலை வரை 3,026 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தீவிர ஆய்வுக்கு பின், பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணியில் கல்வி அதிகாரிகள் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் பள்ளிக்கு வராமல் இருப்பவர்களின் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’பணிநிரவல் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு  ஆசிரியர்கள் நேற்று முதல் பள்ளிகளில் பாடங்களை கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்களுக்கு கல்வியியல் கல்லு?ரிகளின் உதவியை கேட்டுள்ளோம். அதோடு, கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி.,யிடம்,  பாடம் நடத்தும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தி கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

90 சதவீத ஆசிரியர்கள் ‘ஆப்சென்ட்’: திருவள்ளுர் மாவட்டத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் 90 சதவீத தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். மாவட்டத்தில் 5,380 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள்  பணியிடம் உள்ளது. இதில், 5,199 ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியில் உள்ளனர். இதில், 139 பேர் நீண்ட விடுப்பில் உள்ளனர். தற்போதைய போராட்டத்தில் 4,084 பேர் கலந்துகொண்டு பள்ளிகளுக்கு வரவில்லை. இது 90 சதவீதம்.   இதேபோல், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் 23 சதவீத ஆசிரியர்கள் போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டனர். மாவட்டத்தில் 7,077 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணியிடம் உள்ளது. இதில், 6,382  ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியில் உள்ளனர். இதில், 173 பேர் நீண்ட விடுப்பில் உள்ளனர். தற்போதைய போராட்டத்தில் 1,314 பேர் கலந்துகொண்டு பள்ளிகளுக்கு வரவில்லை. இது 23 சதவீதம். இதனால், நேற்று துவக்கப்  பள்ளிகள் அனைத்தும் மூடும் நிலை ஏற்பட்டது.

Tags : teachers ,servants ,
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...