×

லாரிகள் இடையே சிக்கி டெய்லர் பலி: லாரிகளின் கண்ணாடி அடித்து உடைப்பு...பொதுமக்கள் ஆவேசம்

சென்னை: மணலி புதுநகர் அருகே லாரிகள் நடுவே சிக்கி டெய்லர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.  இதனால், பயந்துபோன டிரைவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சென்னை மணலி புதுநகர் வடிவுடையம்மன் நகரை சேர்ந்தவர் சிட்டிபாபு (50). டெய்லர். நேற்று முன்தினம் இரவு சிட்டிபாபு, மணலி புதுநகர் துவாரகா நகரில்  உள்ள நண்பரை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.அப்போது பொன்னேரி நெடுஞ்சாலை அருகே, பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியை மற்றொரு கன்டெய்னர் லாரி மூலம் பின்நோக்கி தள்ளி  கொண்டிருந்தனர்.அந்த பகுதியில் இருள்சூழ்ந்து காணப்பட்டதால் கன்டெய்னர் நடுவே சிட்டிபாபு சென்றுள்ளார். அப்போது 2 லாரிகளையும் டிரைவர்கள் இயக்கியதால், அதன் நடுவே சிக்கிய சிட்டிபாபு, உடல் நசுங்கி சம்பவ  இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் சிட்டிபாபுவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் அங்கு சென்று, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கினர். மேலும், போக்குவரத்து  போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பயந்துபோன அங்கிருந்த லாரி டிரைவர்கள் தப்பியோடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து மணலி புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று,  மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார், சடலத்தை  கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வந்தவாசியை சேர்ந்த லாரி டிரைவர் தேவேந்திரன் (29) என்பவரை கைது செய்தனர்.

Tags : Larry ,
× RELATED ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை