×

கடன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் தொழிலதிபர்களிடம் பல கோடி மோசடி செய்த வாலிபர் கைது: விமான நிலையத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

சென்னை: கடன் பெற்று தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் தொழிலதிபர்களிடம் பலகோடி மோசடி செய்த வாலிபரை, டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். விமான நிலையத்தில் அவர் மயங்கி விழுந்ததால்,  பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போரூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (32). சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபர்களுக்கு, குறைந்த வட்டியில் பல கோடி கடன் வாங்கி கொடுப்பதாக விளம்பரம் செய்து  இருந்தார்.இதை பார்த்த பல தொழிலதிபர்கள், ஆன்லைன் மூலம் கார்த்திகேயனை தொடர்பு கொண்டனர். அப்போது குறைந்தது ரூ.20 கோடி கடன் பெற்று தரப்படும். அதற்கு முன் பணமாக, தனது வங்கி கணக்கில் 10 சதவீதத்தை  செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அவரிடம் கடன் கேட்டவர்கள், வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர்.

ஆனால் கார்த்திகேயன், தனது வங்கி கணக்கில் பல கோடி சேர்ந்ததும், ஆன்லைனை முடக்கினார். கடன் கேட்டவர்களை தொடர்பு கொள்ளாமல் ஏமாற்றினார். மேலும், அவர் போரூர் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்தார்.இந்த வேளையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம், ரூ.35 கோடிக்கு ரூ.35 லட்சம் பெற்று கொண்டு ஏமாற்றினார். இதனால் அந்த தொழிலதிபர், உத்தரபிரதேச போலீசில் புகார் செய்தார். போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கார்த்ததிகேயன், சென்னை போரூரில் தலைமறைவாக இருப்பதுதெரிந்தது. இதைதொடர்ந்து உத்தரபிரதேச போலீசார், கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை வந்தனர். பின்னர், தமிழக  போலீசார் உதவியுடன், கார்த்திகேயனை நேற்று அதிகாலையில் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று மாலை 5.30 ஏர் இந்தியா விமானத்தில், அவரை கொண்டு செல்வதற்காக, மாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றனர். அங்கு திடீரென கார்த்திகேயன் நெஞ்சுவலி என கூறி மயங்கி விழுந்தார்.  இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே சக்கார நாற்காலி கொண்டு வரப்பட்டு, அதில் கார்த்திகேயனை உட்கார வைத்து, விமான நிலைய வளாகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதனை செய்த டாக்டர்கள், சாதாரண மயக்கம் என கூறி, சிகிச்சை அளித்து அனுப்பினர். அதற்குள், அவர் செல்ல இருந்த விமானம் புறப்பட்டு விட்டது. இதையடுத்து இரவு 9.15 மணிக்கு டெல்லி சென்ற ஏர் இந்தியா  விமானத்தில், கார்த்திகேயனை பலத்த பாதுகாப்புடன், போலீசார் அழைத்து சென்றனர். இதற்கிடையில், மோசடி வழக்கில் டெல்லி அழைத்து சென்ற கார்த்திகேயன் மயங்கி விழுந்த சம்பவம், விமான நிலையம் முழுவதும்  பரவியது. அதில், வெளிநாடு தப்ப முயன்ற தீவிரவாதியை, டெல்லி போலீசார் கைது செய்தனர் என வதந்தி பரவியது. இதனால், விமான நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், மோசடி வழக்கில் கைது  செய்யப்பட்டவர் என தெரிந்தபின், சர்ச்சை ஓய்ந்தது.

Tags : fraudsters ,
× RELATED 420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400...