×

சிவகாசி பகுதியில் தொடர்கிறது மாணவர்களின் ஆபத்தான படிக்கட்டு பயணம்

சிவகாசி. ஜன. 25: சிவகாசியில் மாணவர்களின் ஆபத்தான படிக்கட்டு பயணம் தொடர்கிறது. இதை தடுப்பதற்கு போலீசார், பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அதிகமான கிராமங்களை கொண்டது சிவகாசி. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு படிக்க வருகின்றனர். எட்டாம் வகுப்புக்கு மேல் வந்து விட்டால் சில மாணவர்கள், தங்களை ஒரு ஹீரோவாக நினைத்துக்கொண்டு படிக்கட்டில் பயணம் செய்வது, ஓடும் பஸ்சில் ஏறுவது, இறங்குவது, பஸ்களின் சீட்களின் பின்புறம் கவிதை எழுதுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, அதிகளவில் படிக்கட்டுகளில் பயணம் செய்கின்றனர். பஸ் படிக்கட்டுகள் ஓர் அளவிற்கு மேல் பாரம் தாங்காது. மேடு பள்ளங்கள், வேகத்தடைகளில் ஏறி இறங்கும்போது படியில் தொங்கி வரும் மாணவர்கள் சிறிது தவறி கீழே விழுந்தாலும் பெரும் விபத்து நிகழ்ந்து விடும். இதை யாராலும் ஈடுகட்ட முடியாது.

சிவகாசியில் கடந்த சில ஆண்டுகளில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் விபத்தில் சிக்கி உள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் இதுபோன்ற படிக்கட்டு பயணங்களை காண முடியாது. ஆண்டு தோறும் போலீசார், போக்குவரத்து துறையினர் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பல நடவடிக்கை எடுத்தாலும், இந்த பயணம் தொடர்கிறது. சிவகாசியில் எம்.புதுப்பட்டி, எரிச்சநத்தம், செங்கமலநாச்சியார்புரம், திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, காக்கிவாடன்பட்டி, மாரனேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வரும் பஸ்களில் காலை, மாலை பள்ளி நேரங்களில் படிக்கட்டு பயணம் தொடர்கிறது. காலை வேளையில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, கண்டக்டர் டிக்கெட் கொடுப்பதே பெரும் சிரமம். அந்த நேரத்தில் மாணவர்களின் படிக்கட்டு பயணத்தை தட்டிக் கேட்டால், தகராறில் முடிகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் இதை கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆசிரியர்கள், போலீசார் இணைந்து சில நேரங்களில் அதிரடி சோதனை நடத்தி, படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் தானாக திருந்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு