×

ஜாக்டோ - ஜியோ போராட்டம் 1730 பெண்கள் உட்பட 2640 பேர் கைது

மதுரை, ஜன. 25: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் நேற்று முன்தினம் முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நேற்று மூன்றாவது நாளாக மதுரையில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே திருவள்ளுவர் சிலை பகுதியில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், சதீஸ்குமார், சுரேஷ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வாசலில் நின்று கொண்டு உள்ளே செல்லவில்லை. போலீசார் சாலை மறியலுக்காக அண்ணா பஸ் நிலையம் அருகே ஒரு பகுதியை ஒதுக்கி கொடுத்து மறியல் நடத்த அனுமதித்தனர். ஜாக்டோ ஜியோவினர் அதே இடத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட பெண் ஊழியர்களை போலீசார் கைது செய்து 20 அரசு பஸ்களில் ஏற்றி, திருப்பாலையில் உள்ள 4 திருமண மண்டபங்களில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் 1000 பேரை அழைத்து செல்ல வாகன வசதி இல்லை. இதனால் அவர்கள் நீண்டநேரம் வெயிலில் காத்திருந்தனர். இந்நிலையில், நாம் அனைவரும் ஊர்வலமாக செல்வோம் என கூறி ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். இதனை எதிர்பாராத போலீசார், அவர்களுக்கு பின்னால் ஓடி வந்தனர். அதற்குள் சில அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட அலுவலக வளாகத்திற்குள் சென்றனர். உள்ளே சென்றவர்களை வெளியே தள்ளிய போலீசார் அலுவலகத்தில் உள்ள 2 கேட்டையும் இழுத்து பூட்டினர்.மீண்டும் அவர்கள் ஊர்வலம் செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் அரசு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வாகன வசதி செய்யாததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்பு 10க்கு மேற்பட்ட பஸ்களை கொண்டுவந்து, மீண்டும் அவர்களை கைது செய்த வாகனத்தில் ஏற்றி திருப்பாலை பகுதியிலுள்ள திருமண மண்டபங்களுக்கு அழைத்து சென்றனர். இந்த மறியலில் 1730 பெண்கள் உள்பட 2,640 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : women ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...