×

பொள்ளாச்சி அருகே இனச்சேர்க்கைகாக நடந்த மோதலில் ஆண்யானை பலி

பொள்ளாச்சி.ஜன.25:  பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில், இனச்சேர்க்கைக்காக நடந்த மோதலில் ஆண்  யானை ஒன்றை மற்றொரு ஆண் யானை தந்தத்தால் குத்தி கொன்றது. பொள்ளாச்சி  வனச்சரகத்திற்குட்பட்ட ஆழியார் மற்றும் நவமலை உள்ளிட்ட அடர்ந்த  வனப்பகுதிகளில், அடிக்கடி  யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. நேற்று  மதியம் புதுக்குழி வனப்பகுதியில் வனவர் பிரபாகரன் மற்றும் வனஊழியர்கள்  ரோந்து சென்றனர். அப்போது அங்கு, சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண்யானை  ஒன்று, உடலில் ஆங்காங்கே காயங்களுடன் இறந்து கிடந்தது.
 இதுகுறித்த  தகவலறிந்த வனச்சரகர் காசிலிங்கம் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு  விரைந்து, யானை இறப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

யானை இறப்பு  குறித்து  வனத்துறையினர் கூறுகையில்: பெண் யானையை அடைய வந்த இரண்டு ஆண்  காட்டு யானைகளுக்குள் சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த  ஒரு ஆண் யானை மற்றொரு ஆண் யானையை தந்தத்தால் குத்தி கொன்றுள்ளது. அதற்கான  காயங்கள், இறந்த யானையின் உடலில் ஆங்காங்கே தடயமாக உள்ளது’ என்றனர். இதையடுத்து  இறந்த யானையின் உடல், கால்நடை மருத்துவர் சதீஸ் தலைமையிலான குழுவினர்  பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அந்த யானைகளின் உடல்  பாகங்கள், வனத்தில் உள்ள பிற மாமிச உண்ணிகள் சாப்பிடுவதற்காக, புதைக்காமல்  திறந்த வெளியிலேயே போடப்பட்டது. இருப்பினும் ஆண் யானையை கொன்ற மற்றொரு  யானையை கண்காணித்து துரத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினர்  தெரிவித்தனர்.

Tags : clash ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இலவச...