×

சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள வீடு விடுதிகளால் ஏற்படும் பாதிப்பு என்ன?

சென்னை: சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கடற்கரையில் அமைந்திருக்கும் வீடுகள், விடுதிகள், ரிசார்ட்டுகளால் கடற்கரைக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய தமிழக சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது. சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலையை ஒட்டியும், கடற்கரையை ஒட்டியும் பல பெரிய வீடுகள், உல்லாச விடுதிகள், விளையாட்டு மையங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கட்டுமானங்கள் கடற்கரை ஒழுங்காற்று மண்டலங்களின் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது.  இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் பேரில், ஒரு நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழு சார்பில் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளை மீறி கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆய்வு செய்தது.
இந்த ஆய்வில் 143 பேர் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளை மீறி அப்பகுதியில் கட்டுமானங்களை எழுப்பியிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, அந்த குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில், விதிகளை மீறி கட்டுமான பணி மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் தமிழக கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கடற்கரையில் விதிகளை மீறி மற்றும் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்ட வீடுகள்,

விடுதிகள், விளையாட்டு மையங்களால் கடற்கரை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு, கடலரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வது என முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்காக ஒரு குழுவை அமைத்து ஆய்வை தொடங்க சுற்றுச்சூழல்துறை திட்டமிட்டுள்ளது.

நடிகர், நடிகைகளின் வீடுகளுக்கு ஆபத்து?
இதுகுறித்து சுற்றுச்சூழல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளை மீறி கட்டிடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கடலரிப்பிற்குள்ளான இடங்களை மறுசீரமைப்பு செய்வதற்கும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. விதிகளை மீறி 143 பேர் கட்டிடம் கட்டியிருப்பதாக ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், பிரபல நடிகர், நடிகைகள், தொழிலதிபர்களின் வீடுகள் உள்ளது. கட்சி பிரமுகர்களின் ரிசார்ட்களும் அதில் அடக்கம். இந்த வீடுகள் உண்மையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவுள்ளோம். அதன்பேரில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.


Tags : househouses ,shores ,Mamallapuram ,Chennai ,
× RELATED மேலக்கோட்டையூரில் புதிய காவல்...